Welcome

Wednesday, 26 July 2017

ஆங்கில மருந்து



ஒரு அலோபதி மருத்துவர் ஒரு மருந்துச் சீட்டு எழுதும் முன் நான்கரை வருடங்கள், உடலுறுப்புகளின் அமைப்பியல் (உடலுக்குள் உறுப்புகள் எங்கெங்கே, எவ்வாறு அமைந்துள்ளன), உடற்கூறு இயல், உடல் உறுப்புகள், சுரப்பிகளின் செயல்பாடுகள், ரத்த ஓட்டம், உயிர் வேதியியல் மாற்றங்கள், நுண்ணுயிரியல், நோய்களின் முக்கிய காரணிகள், அலோபதி மருந்தியல், நோய் குறியியல், நோய் உடலில் ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத தெரிந்த மாற்றங்கள் போன்ற அடிப்படை புரிதல் விஞ்ஞானங்களை கற்ற பிறகு, பொது மருத்துவம், பெண்கள் நோய் மருத்துவம் மற்றும் குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சை முறைகள், கண், காது, மூக்கு, தொண்டை, இதயம், கை, கால் எலும்பு முறிவு போன்ற நோய்களை கற்று அறிந்த பின்பு மருந்துச் சீட்டு எழுத அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற பின்பே எழுத அனுமதிக்கப்படுகிறார்.
‘FDA Approval பெற்றிருக்கிறதா, நம் நாட்டில் பயன்படுத்த உரிமம் இருக்கிறதா, நம் நாட்டு வல்லுனர்கள் இதை தம் நோயாளிகளுக்கு பயன்படுத்துகிறார்களா, இம்மருந்தின் மருத்துவ ரசாயனம் அறிந்தவர் அதை மருந்தாகப் பயன்படுத்த மேற்கொண்ட சோதனைகள் ( Pre Clinical Trials With animals, Human beings Volunteers advised) பற்றிய விவரங்கள், அதை முன் நின்று நடத்திய மருத்துவக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்திய மருத்துவ வல்லுனர்களின் மேற்பார்வையில் நோயாளிகளுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் (Post Clinical / Launch Trail) மற்றும் இது பற்றிய கருத்தரங்குகளில் கலந்து கொண்ட பின்னரே, நவீன மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் புதிய மருந்துகளை எழுதுவார்கள்.
நவீன அலோபதி மருத்துவம் மனித உடலை அதன் உறுப்புகளை வேதியியல் கூறுகளாகத்தான் (body is a Biochemical Factory) பிரித்து உணர்ந்து கற்றுத் தெளிகிறது. எலும்புகள் கால்சியம், மெக்னீசியம், சிலேனியம் மற்றும் தாதுப்பொருட்களுடன் ஆன திடமான எலும்புத் திசுக்களால் ஆனது. இது போன்று ஒவ்வொரு திசுக்களும் சில வேதியியல் பொருட்களால் அடிப்படை ஆதாரங்களோடு ஆனதோடு, அவற்றின் செயல்பாட்டுக்கும் சில வேதியியல் மாற்றங்களே காரணமாகின்றன. திசுக்கள், செல்களினால் ஆனவை என்பதை அறிவோம். செல்களின் சுவர்கள் கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச் சத்துகளால் ஆனவை. சைட்டோபிளாசம் எனப்படும் செல்களின் உள்ளிருக்கும் திரவமானது எலெக்ட்ரோலைட்ஸ் எனப்படும் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு பைகார்பனேட் ஆகிய) தாதுப் பொருட்களாலும் புரதம் மற்றும் சர்க்கரையாலும் ஆனவை.
அதன் செல்களின் கரு அல்லது உட்கரு DNA, RNA போன்ற புரோட்டீன்களால் ஆனவை. தசை செல்கள் புரதச் சத்தினால் ஆனது. தசைகள் விரிந்து சுருங்க கால்சியம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அதற்குத் தேவையான ஆற்றல் கார்போஹைட்ரேட் மூலமாகக் கிடைக்கிறது. செல்கள், திசுக்கள், உறுப்புகள் மற்றும் உடலே பயோகெமிக்கல் ஃபேக்டரிதானே!
அதில் ஏற்படும் குறைகளை சரி செய்ய வேறு என்ன தர முடியும்?
நவீன மருத்துவத்தின் அடிப்படையே இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், பரிணாமவியல் மற்றும் பாரம்பரியவியல் ஆகிய விஞ்ஞானங்களை உள்ளடக்கியது. நவீன மருந்துகள் என்றவுடன் அவை மட்டுமே கெமிக்கல் என பிரித்து பார்ப்பதே விஞ்ஞான முதிர்ச்சியற்ற ஒரு ஒப்பீடுதான். உடலும் உணவுமே உயிர் வேதியியல் பொருட்கள் எனும்போது, உட்கொள்ளும் மருந்து அதனுடன் தொடர்பு உடையதாகத்தானே இருக்க முடியும்?
தாமிரம், மாங்கனீஸ், அயோடின், செலினியம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சல்பர் போன்ற தாதுப்பொருட்கள் மிகக்குறைந்த அளவில் நம் உடலில் இன்றியமையாத செயல்களை செய்து வருகின்றன. சோடியம் இல்லையென்றால் பரிமாற்றங்களே உடலில் நடைபெற வாய்ப்பு இல்லை. பொட்டாசி யம், கால்சியம் குறைந்தால் இதய தசைகள் வேலை செய்வது நின்றுவிடும். எலும்புகள் திடத் தன் மையை இழந்துவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல மாற்று மருந்துகளில் உள்ள உலோகங்கள் உடலின் சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட காரணமாகின்றன. ஆகவே, நவீன மருத்துவம் சாட்சிகளை ஆதாரமாக வைத்து (evidence based medicine) நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவ முறையாகும்.
நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் (நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கும் பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும்) என்ற குறளின்படி, நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கு வேறு எந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத, ‘எந்த கிருமி - அதற்கு எந்த மருந்து’ என்று ஆராய்ந்து ‘ஆன்டிபயாட்டிக்’ மூலம் குணப்படுத்தப்படுகிறது. உடல் உறுப்புகளின் குறைபாடுகளினால் (பிறவியிலோ, பின்னாளிலோ, வாழ்நாளிலோ) ஏற்படும் நோய்களுக்கு அதை சரி செய்யும் மருந்துகளும் அறுவைசிகிச்சை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. உடல் நோய் செயல்பாடு குறை களினால் நோய் வருமானால் அதற்கு ஏற்ப செயல்பாடுகளை சரி செய்யும் மருந்துகளும் அறுவை சிகிச்சைகளும் நோயை குணப்படுத்துகின்றன.
ஆங்கில மருந்துகளை கையாள்பவர்கள் எந்த நோயாளிகளுக்கு எதைக் கொடுக்கக்கூடாது, அதன் பக்கவிளைவுகள் என்ன? அதை யாருக்கெல்லாம் முன்னெச்சரிக்கையாக கொடுக்க வேண்டும்? யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? இதையெல்லாம் அறிதல் அவசியம்.
ஆங்கில மருந்துகளுக்கு மட்டும் பக்க விளைவுகள் இருப்பதாக ஒரு தவறான கருத்து எல்லாத் தரப்பு மக்களிடமும் - அதிலும் கற்றவர்களிடம் அதிகம் இருக்கிறது. விளைவை ஏற்படுத்தும் ஒரு வினைக்குத்தானே (மருந்துக்குத்தான்) பக்க விளைவும் இருக்க முடியும். நவீன மருத்துவம் என்பது அனுபவம் சார்ந்த (Experience Based) மருத்துவ முடிவுகளில் இருந்து சாட்சிகளையும் ஆதாரங்களையும் ஆதாரமாகக் கொண்ட (Evidence Based), மருந்துகளின் ஆளுமை (Efficacy), பாதுகாப்பு (Safety) மற்றும் அவற்றின் நோயை குணப்படுத்தும் தனித் திறமை (appropriateness) என்ற அடிப்படையில் மருந்துகளின் நடைமுறை சாத்திய ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது.
மருந்து (Drug) எனப்படுவது வெளியிலிருந்து செலுத்தப்படும் ஒரு வேதியியல் மூலக்கூறாகும். அது அடிப்படையில் மனித குலத்துக்குநன்மை செய்வதாக இருக்க வேண்டும். அதன் ஆளுமை, பாதுகாப்பு தரம், விலை, தாராளமாகக் கிடைக்கும் தன்மை மற்றும் பக்க விளைவுகளும் எதிர்விளைவுகளும் மிகக் குறைவாக உள்ளது ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும். இத்தனை பாதுகாப்புகளையும் தாண்டி வெளிவரும் நவீன மருத்துவ மருந்துகள் Good Manufacturing Practices (GMP) என்ற மிகச்சுத்தமான மருந்து தயாரிக்கும் விதிமுறைகளை மருந்து கம்பெனிகள் கடைப்பிடிக்கின்றனவா? அரசு இயந்திரம் கண்காணிக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி! அதையும் தாண்டி வெளிவரும் நவீன மருத்துவ மருந்துகளை வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல நவீன மருத்துவம் படித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கையாள கற்ற மருந்தாளுநர்களிடம் (பார்மசிஸ்ட்) மட்டுமே கிடைக்க செய்ய வேண்டும்.
அடுத்த இதழ் முதல், மக்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் மருந்துகளின் குணாதிசயம், அதன் விளைவுகள், பக்க விளைவுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வோம்!‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றாள் கருதிச் செயல்’ (மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயதையும் நோயின் அளவையும் சிகிச்சை காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்) என்ற குறள் நினைவிருக்கிறதுதானே? நோயாளியின் வயது, எடை, பால் (Gender), நோயின் அளவு, மற்ற நோய்கள், அதற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், மருந்து ஒவ்வாமை என பல்வேறு விஷயங்களைக் கருத் தில் கொண்டு அலோபதி மருத்துவர் தர வேண்டிய மருந்துகளை, சிகிச்சையை அவரவர் விருப்பப்படி கையில் எடுத்துக் கொள்வதை என்னவென்று சொல்லுவது?

Wednesday, 11 January 2017

முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி




திருப்பு முனை இளைஞர் நல அறக்கட்டளையின் சார்பில் சேலம் அம்மாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று 10.01.17 அன்று முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்யில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நமது அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்ற நிகழ்வுளின் சாராம்சத்தை இங்கே கட்டுரையாக விவரிப்பதன் மூலம் அனைவரும் பயன் அடையாளம் என்ற நோக்கோடு பகிர்கிறோம்.முதல் உதவி பற்றிய தெளிவு உங்களிடம் இருந்தாலும் இந்த கட்டுரையை நீங்கள் பகிர்வதன் மூலம் முதல் உதவி பற்றி அறியாதவர்களும் பயன் பெறலாம் எனவே நல்ல நிகழ்வுகளை பகிர்வதன் மூலம் அனைவரும் பயன்பெறலாம்.
இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள்.
இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.
ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் முன், அவர்களுக்கு தேவையான அவசர சிகிச்சையே “முதலுதவி” எனப்படும்.
இதில், ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும் பொழுது, அவருக்கு எந்த மாதிரியான உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அதனுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் திருப்பு முனை இளைஞர் நல அறக்கட்டளை பிரச்சாரம் செய்துவருகிறது.

ஆபத்தான நிலையில் (உடல்நிலை சரியில்லாமல் அல்லது காயம் பட்டு) இருப்பவருக்கு விரைவாக, சரியான முறையில் மருத்துவ உதவி அளிப்பது முதலுதவி என்று அழைக்கப்படும். ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு, அவருடைய உயிரைக்காப்பாற்ற அப்பொழுது அவருக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து சமயோசிதமாக செயல்பட வேண்டும்.
முதலுதவி செய்பவர் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் வரை அவருடன் இருந்து, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால்,  முதலுதவி என்பது அந்த நேரத்தில் செய்யக்கூடிய தற்காலிகமான சிகிச்சை என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் முதலுதுவி  செய்து மனிதம் காக்க வேண்டும்.
வகுப்பறையில் முதுலுதவி எப்படி செய்ய வேண்டும்?
1. எப்பொழுதும் வகுப்பறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆபத்தான பகுதிகள் இருப்பின் அதை கண்காணித்தவராக இருக்க வேண்டும்.
2. முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பின் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்.
3. சம்பவ இடத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவருக்கு பீதியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து விடும்.
4. வகுப்பறையில் முதலுதவிப் பெட்டி அமைந்திருக்கும் இடத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
5. பாதிக்கப்பட்டவரை யாரும் சூழ்ந்திருக்காதபடி கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இயற்கையின் காற்று அவருக்கு கிடைக்கும்.
விளையாடும்பொழுது ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?
1. மைதானம் மற்றும் இதர இடங்களில் விளையாடும்பொழுது சுளுக்கு, இரத்தப் போக்கு மற்றும் மூட்டு காயங்கள் ஏற்படும்.
2.  இதுபோன்று பாதிப்புகள் ஏற்படும்பொழுது, பாதிக்கப்பட்டவரை இழுக்கவோ அல்லது நகர்த்தவோ செய்ய  வேண்டாம். ஸ்ட்ரச்சரில் வைத்து தேவையான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
3. இரத்தப் போக்கு அல்லது இரத்தக் கசிவு ஏற்பட்டவருக்கு சீக்கிரம் சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடியாக, இரத்தக் கசிவை நிறுத்த முதலுதவிப் பெட்டியில் இருக்கும் கட்டுத்துணி மற்றும் பஞ்சு வைத்து அடி பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். காயம் பட்டவருக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. இக்கட்டான நேரத்தில் தேவையை உணர்ந்து கொஞ்சம் தண்ணீர் கொடுக்கலாம்.
வீட்டில் ஏற்படும் பொழுது…
1. நல்ல வசதிகளை உடைய முதலுதவிப் பெட்டி அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
2. தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்கள் போன்ற பொதுவான காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3. சுளுக்கு ஏற்படும் இடங்களில் நேரடியாக ஐஸ் கட்டி வைக்கக் கூடாது. அதை, ஒரு பாலிதின் பையில் வைத்து சுளுக்கு ஏற்பபட்ட இடத்தில் வைக்கும்பொழுது பயனுள்ளதாக இருக்கும்.
4. சிறு தீக்காயங்களுக்கு மட்டுமே கிரீம் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும்.
5. வீட்டில் எப்பொழுதும், எந்ரேமும் மருத்துவர்களின் போன் நம்பரும், முகவரியும் அவசரத்திற்கு அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வைத்திருக்க வேண்டும்.
சாலையில் ஏற்படும் பொழுது…
1. உங்களுடைய வாகனத்தில் எப்பொழுதும் முதலுதவிப் பெட்டி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
2. சாலையில் விபத்து ஏற்படும்பொழுது உதவி செய்ய சிலர் அசிங்கமாக நினைப்பார்கள். அப்பொழுது நாம் நம்முடைய முதலுதவிப் பெட்டியை எடுத்து தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
ஒரு சில நேரங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தெரியவில்லை என்றால், அப்பொழுது உதவிக்கு மற்றவர்களை அழைக்க வேண்டும்.
3. சில பகுதிகளில் உங்களுக்கு உதவிக்கு ஆட்கள் இருக்காது. அதுபோன்ற இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
4. நீங்கள் உதவி செய்யும்பொழுது, பிறருக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. பாதிக்கப்பட்டவருக்கு அந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மருந்துகளையோ அல்லது டானிக்கோ எதுவும் கொடுத்துவிடக்கூடாது.
முதலுதவி பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்?
1. காயம் பட்ட இடத்தை சுத்தம் செய்ய துணி இருக்க வேண்டும்.
2. கட்டுத் துணி மற்றும் பேண்டேஜ் இருக்க வேண்டும்.
3. நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்து மற்றும் காயத்தை ஆற்றுவதற்கான ஆயின்மெண்ட் இருக்க வேண்டும்.
4. ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள் இருக்க வேண்டும்.
5. முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ் இருக்க வேண்டும்.
6. துணிகளை வெட்ட மற்றும் காயம் பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட நல்ல கத்திரி இருக்க வேண்டும்.
7. தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம் இருக்க வேண்டும்.
8. முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் சிம்பு அல்லது கட்டை இருக்க வேண்டும்.
9. தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும்.
10. காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும்.
இதுவே, முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான – எப்பொழுதும் தேவையான பொருட்களாகும்.
முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளல்
1. முதலுதவிப் பெட்டியில் சிவப்பு நிற “ப்ளஸ்” போட்டிருக்க வேண்டும்.
2. அதில், மருத்துவர்கள் பெயர் அல்லது தொடர்பு எண்கள் எழுதியிருக்க வேண்டும்.
3. வீட்டில் எப்பொழுதும் முதலுதவிப் பெட்டியை எடுக்கின்ற இடமாக இருக்க வேண்டும்.
4. பூட்டிய அலமாரி போன்ற எடுக்க முடியாத இடங்களில் முதுலுதவிப் பெட்டியை வைத்து விடக் கூடாது.
5. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை முதலுதவிப் பெட்டியைப் பரிசோதனை மற்றும் சுத்தம் செய்ய வேண்டும். தேவையான பொருட்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் காலாவதியாகும் தேதியை கண்டறிய வேண்டும்.
முதலுதவியைப் பொறுத்தவரை அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதிலும், குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், இதனுடைய தேவை எப்பொழுதும் இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர்கள் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
4. காது, மூக்கு, கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும்பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
5. சில நேரம் இரத்தம் தடை பட்டு, சுவாசம் நின்று விடும் வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, உணர்வு இருக்கின்றதா, இல்லையா என்பதை அறிய உடம்பின் மெல்லிய பகுதியில் கிள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய வாயை திறந்து உங்களுடைய மூச்சை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும்பொழுது மூச்சடைப்பு  நிற்கும்.
முதலுதவி விஷயத்தில் பெற்றோர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. பெற்றோர்கள் சிறு சிறு காயங்களுக்கு கட்டுப் போடுவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2. உடம்புகளில் வீக்கங்கள் ஏற்படும்பொழுது எந்தெந்த பேண்டேஜிகள் பயன்படுத்துவதுஎன்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
3. இரத்தக் கசிவு, தொடர்ந்து இரத்தம் வடிதல் போன்றவைகளை எவ்வாறு நிறுத்துவது போன்றவைகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
4. அதுபோன்று, சமையலறையில் ஏற்படும் கத்தி வெட்டுகள், கீறல்கள் போன்றவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.
இவ்வாறு, முதலுதவி விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தருணத்திலும் மற்றவர்களுக்கு உதவுவதில், மற்றவர்களின் உடல்நிலைகளில் கவனம் செலுத்துவதில் முன்னணியில் நின்று செயல்பட வேண்டும்.
முதல் உதவி செய்பவரின் பெயரையோ அல்லது முகவரியோ 108 அவசர சேவை,காவல் துறை மற்றும் மருத்துவமனைகளில்  தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.எனவே தயங்காமல் நாம் முதல் உதவி செய்யலாம்.
முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி   தேவைப்படும் குழுவினர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.தற்போது சேலம் மாவட்ட அளவில் மட்டுமே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டம் உள்ளது.
மனிதம் மறவாமல் முதல் உதவி செய்வோம்...நாமும் மனிதருள் மாணிக்கம் ஆவோம்.  

நன்றி..!
தோழமையுடன்,
திருப்பு முனை அ.சாணக்கியன்
தொடர்புக்கு:97897 75758 

திருப்பு முனை இளைஞர் நல அறக்கட்டளை : ஒருங்கிணைப்பாளர் அ.சாணக்கியன் 97897 75758

இது தமிழக அரசு பதிவு பெற்ற அரசு சாரா தன்னார்வ தொண்டு  நிறுவனம்
(பதிவு எண் : 14/2016 ).இந்திய அரசின் தேசிய திட்ட ஆணைக்குழு அங்கீகாரம் பெற்ற தொழில் திறன் மேம்பாடு கல்வி நிறுவனம் அங்கீகாரம்  (பதிவு எண் : TN /7098 ) பெற்றது.
மருத்துவம்:நோயாளி பராமரிப்பு,மெடிக்கல் லேப் டெச்னிசியன்,அறுவை அரங்க உதவியாளர்,எக்ஸ்-ரே டெச்னிசியன் மற்றும் அக்குபஞ்சர்,சித்த மற்றும் ஆயுர்வேதா மருத்துவ கல்வி.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் போட்டோகிராபி,வீடியோகிராபி உள்ளிட்ட 21 துறைகளில் அதிக வேலைவாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான பயிற்சிக் காலம் ஒரு மாதம் முதல், இரண்டு வருடம் வரை தேர்ந்து எடுக்கும் தொழில் துறையின் திறன் தேவையை பொறுத்து கால அளவு வரையறுக்க பட்டு பயிற்சி வழங்க படுகிறது.

பயிற்சி இருக்கு, வேலையும் இருக்கு, வாழ்க்கையில் முன்னேற பட்டதாரியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.பொறுப்பும்,துணிவும் முயற்சியும் இருந்தால் போதும். திருப்பு முனை இளைஞர்களின் முன்னேற்றத்தில் உறுதுணை .

அஞ்சல் வழி மற்றும் பகுதிநேர திறன் மேம்பாட்டு கல்வி    


Monday, 9 January 2017

கொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு - இதுதான் பேலியோ டயட் !

இப்போது தமிழ் இணைய உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் புதிய வகை உணவு முறை பேலியோ டயட். ‘நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன். இரண்டே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்துவிட்டது’ என பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு என்றே உள்ள ’ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற ஃபேஸ்புக் குழு பயங்கர ஆக்டீவாக இயங்கி வருகிறது. 

ஒவ்வொருவரும், ’நான் இன்று இந்த உணவை சாப்பிட்டேன், நான் இத்தனை கிலோ எடை குறைந்துள்ளேன், பேலியோவுக்கு மாறிய பிறகு எனக்கு இருந்த பி.பி. போய்விட்டது’ என அதில் தங்கள் அனுபவங்களை உற்சாகமாகப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ’பேலியோவுக்கு முன், பேலியோவுக்குப் பின்’ என அவர்கள் பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்தால், ஏதோ அதிசயம் போல இருக்கிறது. 

உடல் எடை மட்டுமல்ல, அவர்களின் தோற்றப் பொலிவு பெற்று, வயதே குறைந்ததுபோல் இருக்கிறார்கள். No carb no sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை. அதாவது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது. இது இரண்டையும் தவிர்த்துவிட்டால் வேறு எதை சாப்பிடுவது? ‘பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க’ ‘கொழுப்பை மட்டும் வாங்கிவந்து ஃப்ரை பண்ணி சாப்பிடுங்க’ என்கிறார்கள். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? 

பொதுவாக கொழுப்பைத் தவிர்க்கச் சொல்லிதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கொழுப்பை மட்டுமே சாப்பிடுங்கள் என்று சொல்வது ஏன்? ஏனென்றால் நம் உடம்பில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் குண்டாக இருக்கக் காரணம்.
இந்தக் கொழுப்பு சேரக் காரணம், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்கள். நாம் கார்போஹைட்ரேட்டை தவிர்க்கும்போது, நம் உடம்பு அதை தேட ஆரம்பிக்கிறது. அப்போது, உடம்பில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரித்துப் பயன்படுத்த தொடங்குகிறது. இதன்மூலம்தான் எடை குறைகிறது. ‘ஆனால் நாம் நேரடியாக கொழுப்பையே சாப்பிடுகிறோமே... அது என்ன ஆகும்?’ என்றால், அது கொழுப்பாக சேராது. அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியாக மாறி, எரிக்கப்பட்டுவிடும். சுருங்கச் சொன்னால், கொழுப்பைக் கரைக்க, கொழுப்பை சாப்பிட வேண்டும். முள்ளை முள்ளால் எடுக்கும் அதே டெக்னிக். 

உண்மையில் பேலியோ டயட் என்பது நவீன கால கண்டுபிடிப்பு அல்ல. இது ஆதி மனிதனின் உணவுமுறை. விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். அப்போது சாப்பிட்டதைப் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவு முறை. எடைக்குறைப்புக்கான பிரத்தியேக டயட் அல்ல; இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும். தேவையில்லாத கொழுப்பு கரைந்து, உடல் வலுவடையும்.
இந்தமுறையில் தன் உடம்பைக் குறைத்த பிரபல இணையப் பதிவரும், திரைப்பட இயக்குநருமான கேபிள் சங்கரிடம் பேசினோம். 

‘’நான் கடந்த ஒரு வருஷமா பேலியோவை ஃபாலோ பண்றேன். 2 மாதத்தில் 91 கிலோவில் இருந்து 80 கிலோவாக எடை குறைந்தேன். எனக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அதுவும் கண்ட்ரோலுக்கு வந்தது. பி.பி. அளவு நார்மல் ஆனது. இப்போது சுகர் மாத்திரையை முழுமையாக விட்டுவிட்டேன். எனக்கு சுகர் பிரச்னையே இப்போது இல்லை. காலையில் கார்ப் இல்லாத காய்கறி பொரியல், பகலில் பன்னீர், பன்னீர் டிக்கா, சீஸ், சிக்கன் சூப், மட்டன் சாப்ஸ், இரவில் முட்டை, ஆஃப் ஆயில், பன்னீர், மறுபடியும் காய்கறி பொறியல் இவைதான் என்னுடைய ஒரு நாள் டயட். 

வீட்டில் இருந்து செய்து சாப்பிடுவர்களுக்கு இது பிரச்னை இல்லை. என்னை மாதிரி வெளியில் சுற்றுபவர்களுக்கு இது ஒரு பிரச்னைதான். ஒரு ஹோட்டலுக்கு சென்று டேபிளில் அமர்ந்தால் சர்வர் வருவார். அவரிடம், ‘நாலு ஆம்லேட்’ என்றால் ஒரு மாதிரி பார்ப்பார். அதை முடித்து, ‘ரெண்டு அவிச்ச முட்டை’ என்றால் இன்னும் ஒரு மாதிரிப் பார்ப்பார். பொறியல்தான் இன்றைய இரவு உணவு என்று முடிவு செய்துவிட்டால் நேராக சரவண பவன் போவேன். அங்கே கால் கிலோ பொறியல் 30 ரூபாய்க்கு பார்சல் தருவார்கள். அதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுவேன். ஆரம்பத்தில் வித்தியாசமாகப் பார்த்தார்கள். இப்போது அவர்களே பழகிவிட்டார்கள். எனக்கும் ஒரு மாதிரி செட்டாகிவிட்டது.’’ என்கிறார்.