Welcome

Wednesday, 27 June 2018

தீக்காயங்கள்


அறிமுகம் :
தீக்காயங்கள் ஒரு கடுமையான பொது சுகாதாரப் பிரச்சினையாகும். வெப்பம், கதிர்வீச்சு, கதிரியக்கம், மின்சாரம், உராய்வு அல்லது வேதிப்பொருட்கள் ஆகியவற்றால் தோல் அல்லது பிற அங்ககத் திசுக்களுக்கு ஏற்படும் காயமே தீக்காயம் என வரையறுக்கப்படுகிறது.
சூடான திரவம், திடப்பொருள் அல்லது தீயால் தோலின் பல்வேறு செல் அடுக்குகள் சிதைவடைகின்றன. புறவூதாக் கதிர், கதிர்வீச்சு, மின்சாரம் அல்லது வேதிப்பொருட்களால் ஏற்படும் தோல் காயங்களும், புகையை உள்ளிழுப்பதால் ஏற்படும் மூச்சுமண்டல சிதைவுகளும் தீக்காயங்கள் எனக் கருதப்படுகின்றன.
உலகச் சுகாதார நிறுவனப் புள்ளி விவரத்தின் படி உலகம் முழுவதும் தீக்காயத்தால் ஆண்டுதோறும் 265000 மரணங்கள் நிகழுகின்றன. கொதிநீர், மின்னதிர்ச்சி போன்றவற்றால் நிகழும் இறப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் இதில் அடங்கவில்லை. பெரும்பாலும் மரணங்கள் குறைந்த வருமான நாடுகளில் ஏற்படுகின்றன. குறிப்பாக உ.சு.நி. எல்லைக்குள் அடங்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பாதிப்புகள் அதிகம்.
இந்தியாவில் தீக்காயங்களால் 70 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 1.4 லட்சம் இறப்புகளும் 2.4 லட்சம் ஊனங்களும் இதில் அடங்கும். அதிக வருமான நாடுகளில் தீக்காய மரண விகிதம் குறைந்து வருகிறது.
பிற காயங்கள் போல் அல்லாமல் தீக்காய விகிதம் ஆண்-பெண் இரு பாலாருக்கும் ஒன்று போல் உள்ளது. பிற காயங்களில் ஆண்களின் விகிதம் அதிகம். திறந்தவெளி சமையல், பாதுகாப்பற்ற அடுப்புகள், தளர்வான ஆடைகள் ஆகியவையே பெண்களுக்கு ஆபத்து அளிப்பவை. சுய அல்லது நபர்களுக்கு இடையிலான வன்முறையும் தீக்காயங்களுக்குக் காரணமாக உள்ளது.
பெண்களோடு சிறு குழந்தைகளும் தீக்காயங்கள் ஏற்படும் ஆபத்தில் உள்ளவர்கள். தீக்காயம் அடையும் 5 பேரில் நால்வர் பெண்கள் மற்றும் சிறுவர்கள்.
குழந்தைகளுக்கு உண்டாகும் உயிருக்கு ஆபத்தான காயங்களில் தீப்புண் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. 1-9 வயதுக்குட்பட்ட குழந்தை மரணத்தில் தீப்புண் 11 வது முக்கியக் காரணம் ஆகும். உலக அளவில் தீக்காயங்களால் குழந்தைகளே அதிகமாக மரணம் அடைகின்றன.
நோய்க்குரிய காரணங்களில் தீப்புண் முக்கிய இடத்தை வகிக்கிறது. தப்பிப் பிழைப்பவர்களில் பலர் ஆயுட்கால ஊனங்களாலும், உடல் சிதைவுகளாலும், மன உளைச்சலாலும், அவமானங்களாலும் அல்லல் படுகின்றனர்.
தீக்காயங்கள் தவிர்க்கக் கூடியவையே. அதிக முயற்சியாலும் கவனிப்பாலும் தீக்காய நோய்கள், மரணம் மற்றும் ஊனங்களை வெகுவாகக் குறைக்கலாம்.
தேசிய தீக்காயத் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டம் (NPPMRBI)  என்பது தீக்காயங்களைத் தடுக்கவும்  பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் மறுவாழ்வு அளிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளை வலிமைப்படுத்த இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக சுகாதாரச் சேவைகள் பொது இயக்ககம் மேற்கொள்ளும் ஒரு முன்முயற்சியாகும்.

அறிகுறிகள் :

ஆழத்தைப் பொறுத்துத் தீக்காய அறிகுறிகள் காணப்படும். தீக்காயங்களை மூன்று வகையாகப் பகுக்கலாம்:
முதல்நிலை அல்லது மேலோட்டமான காயங்கள்:  தோலின் மேல் செல்லடுக்கு பாதிக்கப்படுதல். இதனால் சிவப்பும் வலியும் ஏற்படும். கொப்புளம் இருப்பதில்லை. சூரியக் கதிர்வீச்சு, சூடான பொருட்கள், திரவங்கள் அல்லது தீப்பொறி ஆகியவை மூடப்படாதத் தோலின் மேல் படுதலால் இவை ஏற்படுகின்றன. தோல் நிறம், தன்மை அல்லது தடிமனில் எந்தவித நிரந்தரப் பாதிப்பும் இன்றி முதல்நிலைப் புண்கள் ஒரு வாரத்தில் ஆறிவிடும்.
இரண்டாம் நிலை அல்லது பகுதித் தடிப்பு தீப்புண்கள்: ஆழமான தோல் அடுக்குக்குகளைப் பாதிக்கும். அறிகுறிகள் கடுமையாக இருக்கும். பொதுவாகக் கொப்புளங்களும் காணப்படும்.
  • மூன்று வாரங்களில் புண் ஆறும்
  • ஆழமான காயங்கள் ஆற மூன்று வாரங்களுக்கு மேல் ஆகும். மிகைத்தசைவளர்ச்சி வடுக்களும் உருவாகலாம்.
மூன்றாம் நிலை அல்லது முழுத் தடிப்புத் தீப்புண்: அனைத்துத் தோல் அடுக்குகளும் பாதிக்கப்படும். தோல் வெண்மையாகக் காணப்படும்.  ஆரம்பக் கட்டங்களில் வலி இருப்பதில்லை. தோல் அடுக்குகள் வெகுவாக சிதைவடைந்து இருப்பதால் தோல் ஒட்டு சிகிச்சை இன்றி இவை குணமாகா.
உள்ளிழுப்புத் தீப்புண்களின் அறிகுறிகள்-
  • மூடிய இடத்தில் ஏற்பட்டதாக இருக்கும்
  • முகம், கழுத்து, உடலில் ஆழமான தீப்புண்கள்
  • மூக்கு முடி கருகல்
  • கரிகலந்த சளி, வாய்ப்பகுதி மூச்சுக்குழலில் கரித் துகள்கள்
  • குரல் மாற்றம்: கரடுமுரடன ஒலி அல்லது கடுமையான இருமல்









காரணங்கள் :

தீப்புண்ணின் காரணங்களை வெப்பம் சார்ந்தது உள்ளிழுப்பு சார்ந்த்து என இரண்டாகப் பிரிக்கலாம்:
வெப்பத் தீப்புண் பின் வருபவற்றால் ஏற்படும்:
  • சூடான திரவம் –சுடு  நீர், எண்ணெய், கொதிக்கும் நீராவி, சூடான உணவு ஆகியவற்றால் ஏற்படுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
  • சூடான திடப்பொருள்: குறிப்பாக குழந்தைகளுக்கு தீப்புண்களை உண்டாக்கும். சாம்பல், கரி, தேய்ப்புப்பெட்டி, பற்றவைக்கும் கருவி, சமையல் பாத்திரங்கள், கொள்கலன்கள், மின்குமிழ்கள், வெளியேற்றுக் குழாய்கள் ஆகியவை இவ்வகைத் தீப்புண்களை ஏற்படுத்துபவை.
  • தீப்பிழம்பு: கசியும் வாயுக் குழாய், சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு விபத்து, பட்டாசுகள், பந்தல்களில் நெருப்பு பிடித்தல் ஆகியவற்றால் இவ்வகைப் புண்கள் உண்டாகும்.
  • வேதியல் தீப்புண்கள்: இவை வீடுகளில் விபத்தாக நிகழும் (கழிவறை சுத்திகரிப்பான்), அல்லது அமில வீச்சு அல்லது பணியிட விபத்து.
  • மின்சார தீப்புண்:  உறையற்ற மின் கம்பிகளில் சுற்றுத்தடை ஏற்படுவதால் தீப்புண் உண்டாகலாம். வீடுகள், விளையாட்டு மைதானம் அல்லது சாலைகளின் அருகில் செல்லும்  அதி இழுப்புவிசை கொண்ட மின்கம்பிகளால் ஏற்படும்.
  • உள்ளிழுப்புத் தீப்புண்கள்:
  • மிக அதிகமாகச் சூடாக்கப்பட்ட வாயுக்கள். நீராவி, சுடு திரவங்கள் அல்லது முற்றிலும் எரியாத நச்சுப் பொருட்களை சுவாசிப்பதால் இவ்வகைத் தீப்புண்கள் ஏற்படுகின்றன.
  • இவை, மேல் காற்றுப் பாதையில் வெப்பக் காயம், புகைக்கரியினால் காற்றுப்பாதையில் அரிப்பு அல்லது வேதியல் காயங்கள், மூச்சுத்திணறல், மற்றும் கார்பன் மோனாக்சைடு மற்றும் சையனைடு போன்ற பிற வாயுக்களால் நச்சேறல் மற்றும் ஏறத்தாழ 20-30% நேர்வுகளில்  தோல் தீய்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  • நெருப்பு தொடர்பான புண்களால் ஏற்படும்  மரணத்துக்கு உள்ளிழுப்புத் தீப்புண்களே பொதுவான காரணமாக உள்ளது.
ஆபத்துக் காரணிகள்:
 குறைந்த வருமான நாடுகளில் கிராமப் புற ஏழைகள் மத்தியில் தீப்புண்கள் பரவலாக ஏற்படுகின்றன. கவலை அளிக்கும் சில முக்கியக் காரணிகள் வருமாறு:
  • தரை மட்டத்தில் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தல்: குழந்தைகள் இவற்றில் இடறி கொதிநீர் காயம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
  • திறந்த வெளி விறகு அடுப்பைப் பயன்படுத்தல்.
  • திறந்த வெளி சமையலின் போது தளர்வான பருத்தி ஆடை அணிதலாலும் பாத்திரங்களைக் கையாள துணிகளைப் பயன்படுத்தும் தவறான முறையாலும்.
பிற ஆபத்துக் காரணிகள்:
  • பணி இடத்தில் நெருப்பால் ஆபத்து
  • வறுமை: நெரிசல் (படுக்கை/சிறுவர் விளையாடும் பகுதி அருகில் கொண்ட சமையலறை உள்ள ஓர் அறை வீடு)
  • புகைத்தல், மதுப்பழக்கம்
  • பாதுகாப்பு அற்ற எரிவாயு/மின்சாரம்
  • வலிப்பு, ஊனம் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு போன்ற மருத்துவ நிலைகள்.
வீட்டிலும், பணியிடத்திலும் தீப்புண்கள் ஏற்படலாம். சமயலறையில் கொதிநீர், தீப்பிழம்பு அல்லது அடுப்பு வெடிப்பதால் குழந்தைகளும் பெண்களும் காயம் அடைகின்றனர். தீ, கொதிநீர், வேதிப்பொருள், மின்சாரம் ஆகியவற்றால் ஆண்கள் பணியிடங்களில் தீக்காயம் அடைகின்றனர்.

நோய்கண்டறிதல் :

முந்திய முழு விவரங்களும் உடல் பரிசோதனையுமே நோய்கண்டறிதலுக்கான முதற் படி.
அ. தீக்காயத்திற்கான காரணத்தையும் நோயாளியின் வயதையும் கேட்டறிய வேண்டும். இதன் மூலம் பின் வருவன போன்று காயத்தின் ஆழ அகலத்தை அறிய அது உதவும்:
  • தீப்பிழம்புக் காயங்கள் பொதுவாக முழு ஆழப்புண்களாக இருக்கும். கொதிநீர்ப் புண்கள் மேலோட்டமானதாக இருக்கலாம். ஆனால் நெய், எண்ணெய் போன்றவற்றால் ஏற்படும் புண்கள் ஆழமாக இருக்கும். வேதியல் மற்றும் மின்சாரத்தால் உண்டாகும் காயங்கள் ஆழமானவை.
  • நோயாளியின் வயது – குழந்தைகளுக்கும் முதியோருக்கும் தோலின் மென்மை காரணமாகக் காயம் ஆழமாக இருக்கும்.
ஆ. பரிசோதனை:  எரிந்த பரப்பு, காயத்தின் ஆழம் மற்றும் பிற காரணங்களைப் பொறுத்து தீப்புண்ணின் கடுமை காணப்படும். எரிந்த பரப்பைப் பொறுத்து நோயும் மரணமும் ஏற்படும். முதியவர்களுக்குச் சிறிய தீப்புண்ணும் மரண ஆபத்தை உருவாக்கக் கூடும்.
முழு உடல் பரப்பும் 100% எனக் கொள்ளப்படுகிறது. எரிந்த பரப்பு சதவிகிதத்தில் (%) கணக்கிடப் படுகிறது. எரிந்த உடல் பரப்பைக் கணக்கிட பல வழிகள் உள்ளன:
  • 9 களின் விதி: பெரியவர்களின் மொத்த எரிந்த உடல்பரப்பைக் (TBSA)  கணக்கிட இது பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது.  உடல் 11 சமமான பகுதிகளாகப் பகுக்கப் படுகிறது. இது ஒட்டுமொத்தமாக 99 விழுக்காடாகும். மீதி 1% கரவிடத்துக்கு (மலவாய்க்கும் அடிவயிற்றிற்கும் இடைப்பட்டப் பகுதி) ஒதுக்கப்படுகிறது. தலைக்கும் ஒவ்வொரு மேல் அவயவங்களுக்கும் 9 %.  ஒவ்வொரு கீழ் அவயவங்கள், உடலின் முன்பகுதி மற்றும் உடலின் பின்பகுதிக்கு 18 %.*
  • பிறந்த குழந்தை மற்றும் சிறுவர்களில் (10 வயதுக்கும் கீழ்) தலை பெரிதாகவும் உடல் சிறியதாகவும் இருக்கும். எனவே 9 களின் விதி பொருந்தாது. இதனால் லண்ட் மற்றும் பிரவ்டர் அட்டவணையைப் பயன்படுத்தலாம்.
  • உள்ளங்கை விதி: மூடிய கை உடல் பரப்பின் 1% ஆகும்.
ஆரம்பத்தில் தீக்காயம் அடைந்தவர்கள் சிக்கல்கள் இன்றி சாதாரணக் காயம் அடைந்தவர்கள் போலவே காணப்படுவார்கள். ஆனால் 5% மேற்பட்ட எந்தக் காயத்தையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
கடுமையைப் பொறுத்து தீக்காயங்கள் சிறியவை, மிதமானவை மற்றும் ஆபத்தானவை என வகையறுக்கப்படுகின்றன.
சிறு தீப்புண்கள்:
  • பெரியவர்களில் 15% மற்றும் சிறுவர்களில் 10% -க்கும் குறைவான தீப்புண் (வேதியல், மின்சாரத் தீப்புண்களும் முகம், கை மற்றும் கரவிடப் புண்கள் அல்லாமல்)
  • இவற்றிற்கு வெளிநோயாளி சிகிச்சை அளிக்கலாம்
மிதமான தீப்புண்கள்:
  • பெரியவர்களில் 15-25% மற்றும் சிறுவர்களில் 10-15%-க்கும் குறைவான தீப்புண்கள்.
  • மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம்.
ஆபத்தான தீப்புண்கள்:
  • பெரியவர்களில் 25% மற்றும் சிறுவர்களில் 15% பிறந்த குழந்தைகளில் 5% தீப்புண்கள்.
  • மின்சாரத் தீப்புண்
  • வேதியல் தீப்புண்
  • சுவாசமண்டலப் புண்
  • பிற காயங்களோடு தொடர்புடைய தீப்புண்கள்:
o   எலும்புக் காயம்
o   நெஞ்சுக் காயம்
o   வயிற்றுக் காயம்
o   தலைக்காயம்


நவீன சிகிச்சை முறை :

தீ விபத்து எப்போதும் எங்கும் மருத்துவ நிபுணர்கள் இல்லாத இடத்திலும் நிகழக் கூடும். பார்த்துக் கொண்டு இருப்பவர்களே முதலுதவியைச் செய்தாக வேண்டும். விபத்து நடந்த இடத்தில் உடனடியாக அளிக்கப்படும் உதவியால் கடுமையான பாதிப்புகளைக் குறைக்கலாம்.
விபத்து நடக்கும் இடத்தில் (முதல் உதவி: குளிர்வி, மூடு, அழை):  அனைத்து வகையான தீக்காயங்களுக்கும் முதல் உதவி செய்வதன் அடிப்படைகள் ஒரே மாதிரியானதுதான். சில குறிப்பிட்ட வகைகளை குறிப்பிட்ட விதமாகக் கையாள வேண்டும்.
வெப்பத் தீப்புண்:
  • தீப்பிடித்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை அகற்ற வேண்டும்.
  • எரிந்த பகுதி மேல் இருக்குமாறு பாதிக்கப்பட்டவரைத் தரையில் படுக்க வைக்க வேண்டும் (பிற பகுதிகளும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் பாதிக்கப்பட்டவரை உருட்டக் கூடாது என வல்லுநர்கள் உரைக்கின்றனர்). கீழே தரையோடு தரையாகப் படுக்க வைப்பதால் முகம், தலை, முடி ஆகியவையில் பாதிப்பு  ஏற்படாது. மேலும் நெருப்பு உடலைச் சுற்றி பரவாது.
  • தீயை விசிறி விட வாய்ப்பு இருப்பதால் பாதிக்கப்பட்டவரை ஓட விடக் கூடாது.
  • பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தால் அல்லது அவரால் நடக்கமுடியாவிட்டால் தீபற்றிய இடத்தில் இருந்து அவரை இழுத்து அகற்றவும்.
  • நெருப்பு பற்றிய இடத்தில் புகை அதிகமாக இருந்தால் காப்பாற்றுபவர் கீழே தவழ்ந்து செல்ல வேண்டும். இதன் மூலம் நச்சுப் புகை உள்ளிழுப்பைக் குறைக்கலாம் (புகை, வாயு, சூடான காற்று பொதுவாக மேல் எழும்). ஆவி, கரி மற்றும் பிற நச்சுப் பொருட்களை வடிகட்ட ஈரமான கைக்குட்டையின் வழியாக சுவாசிக்கவும்.
  • அதிக அளவில் தண்ணீரைப் பாதிக்கப்பட்டவரின் மேல் ஊற்றி தீயை அணைத்து வெப்பநிலையைக் குறைக்கவும்.
o   தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் பால்,குளிர்பானம் போன்ற எரியாத வேறு திரவத்தைப் பயன்படுத்தலாம் அல்லது
எரிந்த பகுதி மேல் இருக்கும் படியாக பாதிக்கப்பட்டவரை தரையில் கிடத்தவும். கட்டியான பருத்தித் துணியால் (போர்வை/சாக்கு/டரி/கோட்டு அல்லது ஏதாவது கட்டித் துணி) போர்த்தவும் நெருப்பு அணைந்தவுடன் இதை அகற்ற வேண்டும். இல்லையெனில் வெப்பத்தைத் துணி தக்க வைக்கும் (நைலான் அல்லது வேறு எரியும் தன்மையுள்ள  பொருளைப் பயன்படுத்தக் கூடாது).
o   நெருப்பை அணைக்கத் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
o   நெருப்பை அணைக்க மண்/மணலை பாதிக்கப்பட்டவர் மீது பூசவோ எரியவோ கூடாது.
  • எரிந்த துணிகள் அனைத்தும் (பெல்ட்டு, சாக்ஸ், ஷூ உட்பட), நகைகளும் (நெக்லெஸ், கைகடிகாரம், வளையல், பிரேஸ்லெட், மூக்குத்தி, மோதிரம், கொலுசு போன்றவை) அகற்றப்பட வேண்டும்.
  • களிம்பு, கிரீம், லோஷன், பவுடர், கிரீஸ், நெய், ஜெண்டியன் வயலட், காலமைன் லோஷன், பற்பசை, வெண்ணெய், வண்ணமேற்றும் பொருட்கள் போன்ற எதையும் தீப்புண் மேல் இடக்கூடாது.
  • அசுத்தம் ஆகாதவாறு எரிந்த உடல் பகுதிகளை சுத்தமான, உலர்ந்த விரிப்பு/துணியால் பொதியவும். மேல் கீழ் அவயவக் காயத்தை தலையணை /நெகிழி உறையால் மூடவும். காயத்தை மூடுவதால் காற்றோட்டத்தல் ஏற்படும் வலி குறையும். மேலும், பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல முடியும்.
  • மூடப்பட்ட அறையில் தீக்காயம் ஏற்பட்டால் நோயாளிக்குக் கார்பன் மோனாக்சைடு நச்சு ஏற்படும். தொண்டையை சுத்தம் செய்து, கொண்டு செல்லும் போது உயிர்வளி முகமூடியைப் பயன்படுத்த வேண்டும்.
  • தொடர்பான பிற காயங்களையும் சோதித்தறிந்து (எலும்புமுறிவு அல்லது முதுகுத்தண்டுக் காயம்) அதற்கேற்பப் பராமரிப்பு அளிக்க வேண்டும்.
  • உண்ணவும் குடிக்கவும் எதையும் கொடுத்தால் வாந்தி உண்டாகலாம்.
  • முதல் உதவியின் போது வழக்கமான வலிநிவாரணிகள் எதுவும் கொடுப்பதில்லை. நோயாளியையும் குடும்பத்தினரையும் நல்வார்த்தைகள் கூறி தேற்றுவதே ஆரம்பப் பராமரிப்பின் முக்கிய அம்சம் ஆகும்.
  • பிற நோய் அல்லது அம்சங்களைக் (கர்ப்பம், மதுப்பழக்கம், போதைப்பழக்கம்) போன்றவற்றைக் கேட்டறிய வேண்டும்.
  • உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டும். காயம்பட்டு முதல் 6 மணி நேரம் முக்கியமானது. கடுமையான தீக்காயம் பட்ட நோயாளியை உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்
வேதியல் தீப்புண்கள்:
  • அதிக அளவில் தண்ணீர் ஊற்றி வெதிப்பொருளின் அடர்த்தியைக் குறைக்கவும்.
  • S.A.F.E அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது: S – உதவியைக் கூவி அழைக்கவும் (Shout for help), A – நிலவரத்தை விரைவாக மதிப்பிடவும் (Assess the scene quickly), F –வன்நிகழ்வு ஆபத்தில் இருந்து விலகவும் (Free from danger of violence), E –விபத்திழப்பைக் கணிப்பீடு செய்யவும்( Evaluate the casualty).
  • பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவும்.
மின்தீப்புண்:
  • மின் இணைப்பைத் துண்டிக்கவும். உலர் மரக்குச்சி/தடி/மர நாற்காலி போன்ற அரிதிற்கடத்தியைக் கொண்டு பாதிப்படைந்தவரை அகற்றவும்.
  • அதி மின்னழுத்த ஆதாரத்தில் ஒருவர் விபத்துக்கு உட்பட்டிருந்தால், மின்சாரம் மீட்கச் செல்பவரை வளைந்து தாக்கக் கூடுமாதலால் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
  • காற்றுப்பாதை, சுவாசிக்க வழி மற்றும் காற்றோட்டம் உள்ளதா என கவனிக்கவும். எதிரசைவோ சுவாசமோ இல்லை என்றால் நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று பொருள். உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கத் தொடங்கவும்.
  • தொடர்புடைய காயம் உள்ளதா எனப் பார்க்கவும்.
  • உடனடியாக உதவியை அழைக்கவும்.
மின்னல் காயம்:
  • மின்னலால் காயம் அடைந்தவர்களுக்கும் மின் காயம் அடைந்தவர்களைப் போலவே சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோயாளிகளால் மூச்சு தடைபடுவதை நீண்ட நேரத்திற்குத் தாக்கு பிடிக்க இயலும். சில வேளைகளில் இதயப் பிசைவும் செயற்கை சுவாசமும் கொண்ட சிகிச்சைமுறை நீண்ட காலஅளவுக்குத் தேவைப்படும்.
மேலாண்மை
அ. ஆரம்பகட்ட மேலாண்மையில் மதிப்பிடுதலும்  ABCDE அணுகுமுறை கொண்ட கீழ்க்காணும் அளவுகோல்களைப் பராமரித்தலும் தேவைப்படும்.
  • காற்றுப்பாதை (Airway):  உள்ளிழுப்புத் தீப்புண்களுக்கு (மூடிய அறை விபத்து, முகம், கழுத்து அல்லது உடலில் ஆழமான தோல் தீக்காயம், மூக்கு முடி கருகல், வாய்தொண்டைப் பகுதியில் கரித்துகள்கள்) காற்றுப்பாதை மதிப்பீடும் மேலாண்மையும்.
  • சுவாசம் (Breathing): காற்று உள்ளிழுப்பு மற்றும் துரிதக் காற்றுப்பாதைப் பிரச்சினைகள் குறித்த எச்சரிக்கை.
  • சுற்றோட்டம்(Circulation): அகன்ற துளை நரம்புட்குழல் வழியாக ரிங்ஙர் லாக்டேட் கரைசலைத் துரிதமாகச் செலுத்தி திரவ மாற்றை உறுதிப்படுத்தவும். ஆரம்ப கட்ட செயற்கை சுவசம் அளித்து உயிர்ப்பித்தபின் வாய்வழி நீர்ச்சத்தேற்றும் கரைசலை அளிக்கலாம்.
  • ஊனம் (Disability): நரம்பியல் குறைபாடுகளோ வேறு ஏதாவது பெரிய ஊனங்களோ ஏற்பட்டுள்ளதா என்று நோக்க வேண்டும். உடலின் ஒரு மூடிய உள்வெளிக்குள் அதிக அழுத்தம் உருவாகும் போது உடற்கூற்றுப்பிரிவு நோய்த்தாக்கம் ஏற்படுகிறது. கால்கள், கைகள் மற்றும் வயிறு இந்நோய்த்தாக்கத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. உடற்கூற்றுப்பிரிவில் உருவாகும் அபாயகரமான அழுத்தத்தை குறைப்பதிலேயே இதன் சிகிச்சை அடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் இருக்கும் கட்டு, முட்டு போன்றவற்றை அகற்ற வேண்டும்.
  • பாதிக்கப்பட்டப் பரப்பு (Exposure):  தீய்ந்த பரப்பின் விழுக்காடு. நோயாளியின் உடல் (பின்பகுதி உட்பட) முழுவதும் சோதிக்கப்பட்டு தீய்ந்த பரப்பைத் துல்லியமாக்க் கணக்கிட்டு ஏதாவது தொடர்புடைய காயங்கள் உள்ளனவா என ஆராய வேண்டும்.
ஆ. அனைத்து நேர்வுகளிலும் வில்வாதசன்னி தடுப்பு மருந்து இட வேண்டும்.
இ. காயப் பராமரிப்பு:
  • ஒட்டிக் கொண்டு இருக்கும் செத்த திசுக்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • காயத்தில் இருந்து இறந்த திசுக்களை நீக்கிய பின், தீப்புண்ணை ஒன்றில் 0.25% (2.5 கி./லி) குளோர்ஹெக்சாடைன் கரைசல் அல்லது 0.1 % (1கி/லி) செட்ரிமைட் கரைசல் அல்லது மென்மையான நீர் அடிப்படை கிருமிநாசினியால் (எரிசாராய அடிப்படை கரைசலைப் பயன்படுத்தக் கூடாது) சுத்தப்படுத்த வேண்டும்.
  • ஒரு மெல்லிய அடுக்கு நுண்ணுயிர்க்கொல்லி களிம்பைப் (சில்வர் சல்பாடயசின்) பூசவேண்டும்.
  • எரிந்த பகுதியைப் பெட்ரோலியம் சல்லடைத்துணி மற்றும் உலர் சல்லடைத்துணியால் கட்ட வேண்டும். வெளிப்புறத்துக்குக் கசிவுகள் எட்டா வண்ணம் இதன் தடிமன் இருக்க வேண்டும்.
ஈ. காயத்தில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முழுவுடல் நுண்ணுயிர்க்கொல்லிகள் (Systemic antibiotics) கொடுக்கப்படும்.
உ. போதுமான அளவுக்கு சக்தியையும் புரதங்களையும் அளிக்கும் தகுந்த சத்துணவை நோயாளிக்கு அளிக்க வேண்டும்.
ஊ. தோல் ஓட்டு அல்லது வடுக்கங்களால் உண்டாகும் சுருக்கங்களை அகற்ற அறுவை போன்ற சிறப்புப் பராமரிப்பைப் புண் ஆறிவரும் காலகட்டத்தில் வழங்க வேண்டும்.
முதல் உதவி:
செய்க:
  • ஆடை, நகைகளை அகற்றித் தீபுண்ணில் தண்ணீர் ஊற்றுவதன் மூலம் எரிச்சலை நிறுத்தவும்.
  • மின்சாரத்தால் தீப்புண் ஏற்பட்டால்  விரைவாக  முக்கிய மின் இணைப்பைத் துண்டிக்கவும். உலர் மரக்குச்சி/தடி/மர நாற்காலி போன்ற அரிதிற்கடத்தியைக் கொண்டு பாதிப்படைந்தவரை அகற்றவும்(அதி மின்னழுத்த ஆதாரத்தில் ஒருவர் விபத்துக்கு உட்பட்டிருந்தால், மின்சாரம் மீட்கச் செல்பவரை வளைந்து தாக்கக் கூடுமாதலால் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது).
  • வெறும் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காவிட்டால் போர்வையைத் தீயின் மேல் இட்டு அணைத்து விட்டு உடனடியாகப் போர்வையை எடுத்துவிட வேண்டும்.
  • வேதியல் தீப்புண் ஏற்பட்டால் வேதிப்பொருளின் அடர்த்தியைக் குறைக்க அதிக அளவில் நீரைக் காயத்தின் மேல் ஊற்ற வேண்டும்.
  • குளிர்ந்த நீரை ஊற்றி காயத்தின் வெப்பத்தைக் குறைக்கவும்.
  • நோயாளியை சுத்தமான துணி அல்லது போர்வையால் சுற்றி உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவும்.
  • கொண்டு செல்லும் போது முறிவோ பிற காயங்களோ ஏற்பட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
  • காற்றுப் பாதை, சுவாசம், காற்றோட்டம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
செய்ய வேண்டாம்:
  • உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் முதலுதவியில் ஈடுபட வேண்டாம் (மின் இணைப்பைத் துண்டிக்கவும், வேதியல் பொருட்களைக் கையாளக் கையுறை பயன்படுத்தவும்).
  • பாதிக்கப்பட்ட திசுக்களை மேலும் பாதிக்குமாதலால் பனிக்கட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • தொடர்ந்து குளிர்நீரை பயன்படுத்தினால் வெப்பநிலை இறங்கக்கூடும்.
  • புண்ணின் மேல் பசை, எண்ணெய், மஞ்சள் அல்லது கரடுமுரடான பருத்தித் துணி அல்லது பிற பொருட்களைப் போடக் கூடாது.
  • மருத்துவப் பணியாளர்களால் நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப் படுவதற்கு முன் கொப்புளங்களை உடைக்கக் கூடாது.
















தடுப்புமுறை :

தனிநபர்களும், சமுதாயங்களும் தீக்காயங்களைத் தடுக்கக் குறிப்பானபரிந்துரைகள்/முன்னெச்சரிக்கைகள்- முதன்மைத் தடுப்பு:
  • வீட்டுச் சூழலில் நெருப்பைச் சுற்றி தடுப்பு அமைத்து உயரத்தை மட்டுப்படுத்த வேண்டும். தரையில் வைத்துச் சமைக்கக் கூடாது.
  • சமையல் பகுதியில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.
  • எரிவாயு அடுப்பு, பிற அடுப்புகள், நுண்ணலை, வெப்பமூட்டிகள் மற்றும் மின் சாதனங்கள் அருகில் குழந்தைகள் நெருங்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
  • கவிழாமல் இருக்கப் பாத்திரப் பிடிகள் அடுப்பின் பின் அல்லது பக்கத்தில் வருமாறு வைக்க வேண்டும்.
  • குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு சமைக்கக் கூடாது.
  • மின் சாதனங்களை கவனமாகப் பயன் படுத்த வேண்டும். மேலும் பயனில் இல்லாத போது மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
  • அங்கீகாரமற்ற எரிவாயு உருளை மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்த வேண்டாம். பாதுகாப்பான அடுப்பையும் விளக்குகளையும் பயன்படுத்துக.
  • தளர்வான ஆடைகளை அணிந்துகொண்டு சமைக்க வேண்டாம். சேலை மற்றும் பிற ஆடைகளை இறுக்கிக் கட்டவும்.
  • குழந்தைகள் அருகில் இருக்கும்போது சூடான திரவம் கொண்ட பாத்திரங்களைக் கையில் வைத்திருக்க வேண்டாம்.
  • குளிக்கும் முன் நீரின் வெப்பநிலையைச் சோதிக்கவும்.
  • வீட்டின் மாடியின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் சென்றால் எச்சரிக்கையாக இருக்கவும். வீட்டில் திறந்த மின் கம்பிகள் இருக்கக் கூடாது.
  • விழாக் காலங்களில் பட்டாசுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும்.
விழாக்கால (தீபாவளி) பாதுகாப்பு:
§  குழந்தைகள் உங்கள் மேல்பார்வையிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
§  வெடிக்கும் பட்டாசுகளைக் கையில் பிடிக்கக் கூடாது.
§  எரியும் மத்தாப்புகளைப் பிறர்/தன்னை நோக்கிப் பிடிக்கக் கூடாது.
§  வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
§  திறந்த வெளியிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • அமில வீச்சு: சட்ட சீரமைப்பு, அமில/வேதிப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தல், சமுதாய மனமாற்றம் ஆகியவையே இதனைத் தடுக்கும் வழிகள். அமிலங்களைக் கவனத்துடன் கையாள வேண்டும்.
  • தீ பாதுகப்புக் கல்வியை ஊக்கப்படுத்தவும். புகை உணரி/புகை எச்சரிக்கை, தீயணைப்புக் கருவி, நெருப்பில் இருந்து தப்பும் அமைப்பு ஆகியவற்றை வீடுகளில் பயன்படுத்த வேண்டும். புகை எச்சரிக்கை தொடக்கக் கட்டத்திலேயே எச்சரிக்கை தருகிறது. எனவே மக்கள் தீ பரவுவதற்குள் தப்பலாம்.
  • வலிப்பு போன்ற நோய்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • புயலின்போது:
§  கட்டிடத்திற்குள் செல்லவும் (கதவு, சன்னல், உலோகப் பொருள் (குழாய், சிங்க், ரேடியேட்டர்) மற்றும் இணைப்பில் இருக்கும் மின் சாதனங்களில் இருந்து விலகி இருக்கவும்).
§  வெளியில் மறைவிடம் கிடைக்காவிடால் மரங்களில் இருந்து விலகி நிற்கவும்.
§  மின்னல் நீர்வழிப் பாயும். எனவே புயல் நேரத்தில் நீச்சல், படகில் செல்லுதல், குளித்தல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
இரண்டாம்நிலை தடுப்புமுறை: தீப்புண் நோயாளிகளை இறப்பில் இருந்தும் ஊனத்தில் இருந்தும் காப்பாற்ற முன் பின் மருத்துவமனை மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கின்றன.
§  முதல் உதவி: தீக்காய நோயாளிகள் விரைவில் குணமடைய முதல் உதவியின் பங்கு குறித்து தனிநபர் மற்றும் மக்கள் சமுதாயத்தை உணர்வூட்டி அறிவுபுகட்டுதல்.
§  சிறந்த மருத்துவமனை பராமரிப்பு: அதிர்ச்சியையும் சுவாசப் பிரச்சினைகளையும்  தடுக்க சிறந்த ஆரம்பக் கட்ட சிகிச்சை, சிறந்த தொற்றுத் தடுப்பு, அதிக அளவில் தோல் ஒட்டு, மற்றும் போதுமான சத்துணவு ஆகியவை இதில் அடங்கும். இறப்பு, ஊனம் மற்றும் தீப்புண் வலி ஆகியவற்றை இது குறைக்கும்.
மூன்றாம் நிலை தடுப்பு:
§  மறுவாழ்வு: தீக்காயம் அடைந்தவர்கள் ஊனம் மற்றும் உடல் சிதைவு அடைவதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும். உடல்பயிற்சி மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகிய நடவடிக்கைகள் மூலம் தீக்காயம் அடைந்து பிழைத்தவர்களுக்கு சிறந்த வாழ்க்கை அமையும்.
தேசிய தீக்காயங்கள் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டம்(NPPMRBI):
பயிற்சி பெற்ற நிபுணர்களால் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் தீக்காயத்தால் ஏற்படும் மரணத்தையும் ஊனத்தையும் பெரிய அளவில் தடுக்க முடியும். தீக்காயப் பாதிப்பைத்  தடுத்தல் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் ஆகிய சேவைகளுக்காக இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்ககம் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் தேசிய தீக்காயங்கள் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
§  தீக்காய நிகழ்வுகள், நோய், மரணம் மற்றும் ஊனத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு இத் திட்டம் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவ மனைகள் வழியாக நடைமுறைப்படுத்தப் படுகிறது.
§  விழிப்புணர்வு உருவாக்கல், தீக்காய நோயாளிகளைக் கையாளவும் மறுவாழ்வு அளிக்கவும் தகுந்த கட்டமைப்புகளும் பயிற்சிபெற்ற வல்லுநர்களும் கொண்டு போதுமான சுகாதார வசதிகள் வழங்கல், மற்றும் ஆய்வுப்பின்புலத்தை உருவாக்குதலுமே இத்திட்டத்தின் முன்னுரிமைகள் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு-
குறிப்புகள்:



Wednesday, 26 July 2017

ஆங்கில மருந்து



ஒரு அலோபதி மருத்துவர் ஒரு மருந்துச் சீட்டு எழுதும் முன் நான்கரை வருடங்கள், உடலுறுப்புகளின் அமைப்பியல் (உடலுக்குள் உறுப்புகள் எங்கெங்கே, எவ்வாறு அமைந்துள்ளன), உடற்கூறு இயல், உடல் உறுப்புகள், சுரப்பிகளின் செயல்பாடுகள், ரத்த ஓட்டம், உயிர் வேதியியல் மாற்றங்கள், நுண்ணுயிரியல், நோய்களின் முக்கிய காரணிகள், அலோபதி மருந்தியல், நோய் குறியியல், நோய் உடலில் ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத தெரிந்த மாற்றங்கள் போன்ற அடிப்படை புரிதல் விஞ்ஞானங்களை கற்ற பிறகு, பொது மருத்துவம், பெண்கள் நோய் மருத்துவம் மற்றும் குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சை முறைகள், கண், காது, மூக்கு, தொண்டை, இதயம், கை, கால் எலும்பு முறிவு போன்ற நோய்களை கற்று அறிந்த பின்பு மருந்துச் சீட்டு எழுத அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற பின்பே எழுத அனுமதிக்கப்படுகிறார்.
‘FDA Approval பெற்றிருக்கிறதா, நம் நாட்டில் பயன்படுத்த உரிமம் இருக்கிறதா, நம் நாட்டு வல்லுனர்கள் இதை தம் நோயாளிகளுக்கு பயன்படுத்துகிறார்களா, இம்மருந்தின் மருத்துவ ரசாயனம் அறிந்தவர் அதை மருந்தாகப் பயன்படுத்த மேற்கொண்ட சோதனைகள் ( Pre Clinical Trials With animals, Human beings Volunteers advised) பற்றிய விவரங்கள், அதை முன் நின்று நடத்திய மருத்துவக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்திய மருத்துவ வல்லுனர்களின் மேற்பார்வையில் நோயாளிகளுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் (Post Clinical / Launch Trail) மற்றும் இது பற்றிய கருத்தரங்குகளில் கலந்து கொண்ட பின்னரே, நவீன மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் புதிய மருந்துகளை எழுதுவார்கள்.
நவீன அலோபதி மருத்துவம் மனித உடலை அதன் உறுப்புகளை வேதியியல் கூறுகளாகத்தான் (body is a Biochemical Factory) பிரித்து உணர்ந்து கற்றுத் தெளிகிறது. எலும்புகள் கால்சியம், மெக்னீசியம், சிலேனியம் மற்றும் தாதுப்பொருட்களுடன் ஆன திடமான எலும்புத் திசுக்களால் ஆனது. இது போன்று ஒவ்வொரு திசுக்களும் சில வேதியியல் பொருட்களால் அடிப்படை ஆதாரங்களோடு ஆனதோடு, அவற்றின் செயல்பாட்டுக்கும் சில வேதியியல் மாற்றங்களே காரணமாகின்றன. திசுக்கள், செல்களினால் ஆனவை என்பதை அறிவோம். செல்களின் சுவர்கள் கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச் சத்துகளால் ஆனவை. சைட்டோபிளாசம் எனப்படும் செல்களின் உள்ளிருக்கும் திரவமானது எலெக்ட்ரோலைட்ஸ் எனப்படும் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு பைகார்பனேட் ஆகிய) தாதுப் பொருட்களாலும் புரதம் மற்றும் சர்க்கரையாலும் ஆனவை.
அதன் செல்களின் கரு அல்லது உட்கரு DNA, RNA போன்ற புரோட்டீன்களால் ஆனவை. தசை செல்கள் புரதச் சத்தினால் ஆனது. தசைகள் விரிந்து சுருங்க கால்சியம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அதற்குத் தேவையான ஆற்றல் கார்போஹைட்ரேட் மூலமாகக் கிடைக்கிறது. செல்கள், திசுக்கள், உறுப்புகள் மற்றும் உடலே பயோகெமிக்கல் ஃபேக்டரிதானே!
அதில் ஏற்படும் குறைகளை சரி செய்ய வேறு என்ன தர முடியும்?
நவீன மருத்துவத்தின் அடிப்படையே இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், பரிணாமவியல் மற்றும் பாரம்பரியவியல் ஆகிய விஞ்ஞானங்களை உள்ளடக்கியது. நவீன மருந்துகள் என்றவுடன் அவை மட்டுமே கெமிக்கல் என பிரித்து பார்ப்பதே விஞ்ஞான முதிர்ச்சியற்ற ஒரு ஒப்பீடுதான். உடலும் உணவுமே உயிர் வேதியியல் பொருட்கள் எனும்போது, உட்கொள்ளும் மருந்து அதனுடன் தொடர்பு உடையதாகத்தானே இருக்க முடியும்?
தாமிரம், மாங்கனீஸ், அயோடின், செலினியம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சல்பர் போன்ற தாதுப்பொருட்கள் மிகக்குறைந்த அளவில் நம் உடலில் இன்றியமையாத செயல்களை செய்து வருகின்றன. சோடியம் இல்லையென்றால் பரிமாற்றங்களே உடலில் நடைபெற வாய்ப்பு இல்லை. பொட்டாசி யம், கால்சியம் குறைந்தால் இதய தசைகள் வேலை செய்வது நின்றுவிடும். எலும்புகள் திடத் தன் மையை இழந்துவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல மாற்று மருந்துகளில் உள்ள உலோகங்கள் உடலின் சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட காரணமாகின்றன. ஆகவே, நவீன மருத்துவம் சாட்சிகளை ஆதாரமாக வைத்து (evidence based medicine) நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவ முறையாகும்.
நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் (நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கும் பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும்) என்ற குறளின்படி, நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கு வேறு எந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத, ‘எந்த கிருமி - அதற்கு எந்த மருந்து’ என்று ஆராய்ந்து ‘ஆன்டிபயாட்டிக்’ மூலம் குணப்படுத்தப்படுகிறது. உடல் உறுப்புகளின் குறைபாடுகளினால் (பிறவியிலோ, பின்னாளிலோ, வாழ்நாளிலோ) ஏற்படும் நோய்களுக்கு அதை சரி செய்யும் மருந்துகளும் அறுவைசிகிச்சை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. உடல் நோய் செயல்பாடு குறை களினால் நோய் வருமானால் அதற்கு ஏற்ப செயல்பாடுகளை சரி செய்யும் மருந்துகளும் அறுவை சிகிச்சைகளும் நோயை குணப்படுத்துகின்றன.
ஆங்கில மருந்துகளை கையாள்பவர்கள் எந்த நோயாளிகளுக்கு எதைக் கொடுக்கக்கூடாது, அதன் பக்கவிளைவுகள் என்ன? அதை யாருக்கெல்லாம் முன்னெச்சரிக்கையாக கொடுக்க வேண்டும்? யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? இதையெல்லாம் அறிதல் அவசியம்.
ஆங்கில மருந்துகளுக்கு மட்டும் பக்க விளைவுகள் இருப்பதாக ஒரு தவறான கருத்து எல்லாத் தரப்பு மக்களிடமும் - அதிலும் கற்றவர்களிடம் அதிகம் இருக்கிறது. விளைவை ஏற்படுத்தும் ஒரு வினைக்குத்தானே (மருந்துக்குத்தான்) பக்க விளைவும் இருக்க முடியும். நவீன மருத்துவம் என்பது அனுபவம் சார்ந்த (Experience Based) மருத்துவ முடிவுகளில் இருந்து சாட்சிகளையும் ஆதாரங்களையும் ஆதாரமாகக் கொண்ட (Evidence Based), மருந்துகளின் ஆளுமை (Efficacy), பாதுகாப்பு (Safety) மற்றும் அவற்றின் நோயை குணப்படுத்தும் தனித் திறமை (appropriateness) என்ற அடிப்படையில் மருந்துகளின் நடைமுறை சாத்திய ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது.
மருந்து (Drug) எனப்படுவது வெளியிலிருந்து செலுத்தப்படும் ஒரு வேதியியல் மூலக்கூறாகும். அது அடிப்படையில் மனித குலத்துக்குநன்மை செய்வதாக இருக்க வேண்டும். அதன் ஆளுமை, பாதுகாப்பு தரம், விலை, தாராளமாகக் கிடைக்கும் தன்மை மற்றும் பக்க விளைவுகளும் எதிர்விளைவுகளும் மிகக் குறைவாக உள்ளது ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும். இத்தனை பாதுகாப்புகளையும் தாண்டி வெளிவரும் நவீன மருத்துவ மருந்துகள் Good Manufacturing Practices (GMP) என்ற மிகச்சுத்தமான மருந்து தயாரிக்கும் விதிமுறைகளை மருந்து கம்பெனிகள் கடைப்பிடிக்கின்றனவா? அரசு இயந்திரம் கண்காணிக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி! அதையும் தாண்டி வெளிவரும் நவீன மருத்துவ மருந்துகளை வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல நவீன மருத்துவம் படித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கையாள கற்ற மருந்தாளுநர்களிடம் (பார்மசிஸ்ட்) மட்டுமே கிடைக்க செய்ய வேண்டும்.
அடுத்த இதழ் முதல், மக்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் மருந்துகளின் குணாதிசயம், அதன் விளைவுகள், பக்க விளைவுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வோம்!‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றாள் கருதிச் செயல்’ (மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயதையும் நோயின் அளவையும் சிகிச்சை காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்) என்ற குறள் நினைவிருக்கிறதுதானே? நோயாளியின் வயது, எடை, பால் (Gender), நோயின் அளவு, மற்ற நோய்கள், அதற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், மருந்து ஒவ்வாமை என பல்வேறு விஷயங்களைக் கருத் தில் கொண்டு அலோபதி மருத்துவர் தர வேண்டிய மருந்துகளை, சிகிச்சையை அவரவர் விருப்பப்படி கையில் எடுத்துக் கொள்வதை என்னவென்று சொல்லுவது?

Wednesday, 11 January 2017

முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி




திருப்பு முனை இளைஞர் நல அறக்கட்டளையின் சார்பில் சேலம் அம்மாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று 10.01.17 அன்று முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்யில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நமது அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்ற நிகழ்வுளின் சாராம்சத்தை இங்கே கட்டுரையாக விவரிப்பதன் மூலம் அனைவரும் பயன் அடையாளம் என்ற நோக்கோடு பகிர்கிறோம்.முதல் உதவி பற்றிய தெளிவு உங்களிடம் இருந்தாலும் இந்த கட்டுரையை நீங்கள் பகிர்வதன் மூலம் முதல் உதவி பற்றி அறியாதவர்களும் பயன் பெறலாம் எனவே நல்ல நிகழ்வுகளை பகிர்வதன் மூலம் அனைவரும் பயன்பெறலாம்.
இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள்.
இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.
ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் முன், அவர்களுக்கு தேவையான அவசர சிகிச்சையே “முதலுதவி” எனப்படும்.
இதில், ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும் பொழுது, அவருக்கு எந்த மாதிரியான உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அதனுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் திருப்பு முனை இளைஞர் நல அறக்கட்டளை பிரச்சாரம் செய்துவருகிறது.

ஆபத்தான நிலையில் (உடல்நிலை சரியில்லாமல் அல்லது காயம் பட்டு) இருப்பவருக்கு விரைவாக, சரியான முறையில் மருத்துவ உதவி அளிப்பது முதலுதவி என்று அழைக்கப்படும். ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு, அவருடைய உயிரைக்காப்பாற்ற அப்பொழுது அவருக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து சமயோசிதமாக செயல்பட வேண்டும்.
முதலுதவி செய்பவர் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் வரை அவருடன் இருந்து, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால்,  முதலுதவி என்பது அந்த நேரத்தில் செய்யக்கூடிய தற்காலிகமான சிகிச்சை என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் முதலுதுவி  செய்து மனிதம் காக்க வேண்டும்.
வகுப்பறையில் முதுலுதவி எப்படி செய்ய வேண்டும்?
1. எப்பொழுதும் வகுப்பறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆபத்தான பகுதிகள் இருப்பின் அதை கண்காணித்தவராக இருக்க வேண்டும்.
2. முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பின் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்.
3. சம்பவ இடத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவருக்கு பீதியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து விடும்.
4. வகுப்பறையில் முதலுதவிப் பெட்டி அமைந்திருக்கும் இடத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
5. பாதிக்கப்பட்டவரை யாரும் சூழ்ந்திருக்காதபடி கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இயற்கையின் காற்று அவருக்கு கிடைக்கும்.
விளையாடும்பொழுது ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?
1. மைதானம் மற்றும் இதர இடங்களில் விளையாடும்பொழுது சுளுக்கு, இரத்தப் போக்கு மற்றும் மூட்டு காயங்கள் ஏற்படும்.
2.  இதுபோன்று பாதிப்புகள் ஏற்படும்பொழுது, பாதிக்கப்பட்டவரை இழுக்கவோ அல்லது நகர்த்தவோ செய்ய  வேண்டாம். ஸ்ட்ரச்சரில் வைத்து தேவையான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
3. இரத்தப் போக்கு அல்லது இரத்தக் கசிவு ஏற்பட்டவருக்கு சீக்கிரம் சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடியாக, இரத்தக் கசிவை நிறுத்த முதலுதவிப் பெட்டியில் இருக்கும் கட்டுத்துணி மற்றும் பஞ்சு வைத்து அடி பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். காயம் பட்டவருக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. இக்கட்டான நேரத்தில் தேவையை உணர்ந்து கொஞ்சம் தண்ணீர் கொடுக்கலாம்.
வீட்டில் ஏற்படும் பொழுது…
1. நல்ல வசதிகளை உடைய முதலுதவிப் பெட்டி அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
2. தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்கள் போன்ற பொதுவான காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3. சுளுக்கு ஏற்படும் இடங்களில் நேரடியாக ஐஸ் கட்டி வைக்கக் கூடாது. அதை, ஒரு பாலிதின் பையில் வைத்து சுளுக்கு ஏற்பபட்ட இடத்தில் வைக்கும்பொழுது பயனுள்ளதாக இருக்கும்.
4. சிறு தீக்காயங்களுக்கு மட்டுமே கிரீம் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும்.
5. வீட்டில் எப்பொழுதும், எந்ரேமும் மருத்துவர்களின் போன் நம்பரும், முகவரியும் அவசரத்திற்கு அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வைத்திருக்க வேண்டும்.
சாலையில் ஏற்படும் பொழுது…
1. உங்களுடைய வாகனத்தில் எப்பொழுதும் முதலுதவிப் பெட்டி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
2. சாலையில் விபத்து ஏற்படும்பொழுது உதவி செய்ய சிலர் அசிங்கமாக நினைப்பார்கள். அப்பொழுது நாம் நம்முடைய முதலுதவிப் பெட்டியை எடுத்து தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
ஒரு சில நேரங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தெரியவில்லை என்றால், அப்பொழுது உதவிக்கு மற்றவர்களை அழைக்க வேண்டும்.
3. சில பகுதிகளில் உங்களுக்கு உதவிக்கு ஆட்கள் இருக்காது. அதுபோன்ற இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
4. நீங்கள் உதவி செய்யும்பொழுது, பிறருக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. பாதிக்கப்பட்டவருக்கு அந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மருந்துகளையோ அல்லது டானிக்கோ எதுவும் கொடுத்துவிடக்கூடாது.
முதலுதவி பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்?
1. காயம் பட்ட இடத்தை சுத்தம் செய்ய துணி இருக்க வேண்டும்.
2. கட்டுத் துணி மற்றும் பேண்டேஜ் இருக்க வேண்டும்.
3. நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்து மற்றும் காயத்தை ஆற்றுவதற்கான ஆயின்மெண்ட் இருக்க வேண்டும்.
4. ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள் இருக்க வேண்டும்.
5. முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ் இருக்க வேண்டும்.
6. துணிகளை வெட்ட மற்றும் காயம் பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட நல்ல கத்திரி இருக்க வேண்டும்.
7. தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம் இருக்க வேண்டும்.
8. முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் சிம்பு அல்லது கட்டை இருக்க வேண்டும்.
9. தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும்.
10. காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும்.
இதுவே, முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான – எப்பொழுதும் தேவையான பொருட்களாகும்.
முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளல்
1. முதலுதவிப் பெட்டியில் சிவப்பு நிற “ப்ளஸ்” போட்டிருக்க வேண்டும்.
2. அதில், மருத்துவர்கள் பெயர் அல்லது தொடர்பு எண்கள் எழுதியிருக்க வேண்டும்.
3. வீட்டில் எப்பொழுதும் முதலுதவிப் பெட்டியை எடுக்கின்ற இடமாக இருக்க வேண்டும்.
4. பூட்டிய அலமாரி போன்ற எடுக்க முடியாத இடங்களில் முதுலுதவிப் பெட்டியை வைத்து விடக் கூடாது.
5. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை முதலுதவிப் பெட்டியைப் பரிசோதனை மற்றும் சுத்தம் செய்ய வேண்டும். தேவையான பொருட்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் காலாவதியாகும் தேதியை கண்டறிய வேண்டும்.
முதலுதவியைப் பொறுத்தவரை அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதிலும், குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், இதனுடைய தேவை எப்பொழுதும் இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர்கள் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
4. காது, மூக்கு, கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும்பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
5. சில நேரம் இரத்தம் தடை பட்டு, சுவாசம் நின்று விடும் வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, உணர்வு இருக்கின்றதா, இல்லையா என்பதை அறிய உடம்பின் மெல்லிய பகுதியில் கிள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய வாயை திறந்து உங்களுடைய மூச்சை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும்பொழுது மூச்சடைப்பு  நிற்கும்.
முதலுதவி விஷயத்தில் பெற்றோர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. பெற்றோர்கள் சிறு சிறு காயங்களுக்கு கட்டுப் போடுவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2. உடம்புகளில் வீக்கங்கள் ஏற்படும்பொழுது எந்தெந்த பேண்டேஜிகள் பயன்படுத்துவதுஎன்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
3. இரத்தக் கசிவு, தொடர்ந்து இரத்தம் வடிதல் போன்றவைகளை எவ்வாறு நிறுத்துவது போன்றவைகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
4. அதுபோன்று, சமையலறையில் ஏற்படும் கத்தி வெட்டுகள், கீறல்கள் போன்றவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.
இவ்வாறு, முதலுதவி விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தருணத்திலும் மற்றவர்களுக்கு உதவுவதில், மற்றவர்களின் உடல்நிலைகளில் கவனம் செலுத்துவதில் முன்னணியில் நின்று செயல்பட வேண்டும்.
முதல் உதவி செய்பவரின் பெயரையோ அல்லது முகவரியோ 108 அவசர சேவை,காவல் துறை மற்றும் மருத்துவமனைகளில்  தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.எனவே தயங்காமல் நாம் முதல் உதவி செய்யலாம்.
முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி   தேவைப்படும் குழுவினர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.தற்போது சேலம் மாவட்ட அளவில் மட்டுமே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டம் உள்ளது.
மனிதம் மறவாமல் முதல் உதவி செய்வோம்...நாமும் மனிதருள் மாணிக்கம் ஆவோம்.  

நன்றி..!
தோழமையுடன்,
திருப்பு முனை அ.சாணக்கியன்
தொடர்புக்கு:97897 75758 

திருப்பு முனை இளைஞர் நல அறக்கட்டளை : ஒருங்கிணைப்பாளர் அ.சாணக்கியன் 97897 75758

இது தமிழக அரசு பதிவு பெற்ற அரசு சாரா தன்னார்வ தொண்டு  நிறுவனம்
(பதிவு எண் : 14/2016 ).இந்திய அரசின் தேசிய திட்ட ஆணைக்குழு அங்கீகாரம் பெற்ற தொழில் திறன் மேம்பாடு கல்வி நிறுவனம் அங்கீகாரம்  (பதிவு எண் : TN /7098 ) பெற்றது.
மருத்துவம்:நோயாளி பராமரிப்பு,மெடிக்கல் லேப் டெச்னிசியன்,அறுவை அரங்க உதவியாளர்,எக்ஸ்-ரே டெச்னிசியன் மற்றும் அக்குபஞ்சர்,சித்த மற்றும் ஆயுர்வேதா மருத்துவ கல்வி.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் போட்டோகிராபி,வீடியோகிராபி உள்ளிட்ட 21 துறைகளில் அதிக வேலைவாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான பயிற்சிக் காலம் ஒரு மாதம் முதல், இரண்டு வருடம் வரை தேர்ந்து எடுக்கும் தொழில் துறையின் திறன் தேவையை பொறுத்து கால அளவு வரையறுக்க பட்டு பயிற்சி வழங்க படுகிறது.

பயிற்சி இருக்கு, வேலையும் இருக்கு, வாழ்க்கையில் முன்னேற பட்டதாரியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.பொறுப்பும்,துணிவும் முயற்சியும் இருந்தால் போதும். திருப்பு முனை இளைஞர்களின் முன்னேற்றத்தில் உறுதுணை .

அஞ்சல் வழி மற்றும் பகுதிநேர திறன் மேம்பாட்டு கல்வி    


Monday, 9 January 2017

கொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு - இதுதான் பேலியோ டயட் !

இப்போது தமிழ் இணைய உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் புதிய வகை உணவு முறை பேலியோ டயட். ‘நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன். இரண்டே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்துவிட்டது’ என பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு என்றே உள்ள ’ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற ஃபேஸ்புக் குழு பயங்கர ஆக்டீவாக இயங்கி வருகிறது. 

ஒவ்வொருவரும், ’நான் இன்று இந்த உணவை சாப்பிட்டேன், நான் இத்தனை கிலோ எடை குறைந்துள்ளேன், பேலியோவுக்கு மாறிய பிறகு எனக்கு இருந்த பி.பி. போய்விட்டது’ என அதில் தங்கள் அனுபவங்களை உற்சாகமாகப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ’பேலியோவுக்கு முன், பேலியோவுக்குப் பின்’ என அவர்கள் பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்தால், ஏதோ அதிசயம் போல இருக்கிறது. 

உடல் எடை மட்டுமல்ல, அவர்களின் தோற்றப் பொலிவு பெற்று, வயதே குறைந்ததுபோல் இருக்கிறார்கள். No carb no sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை. அதாவது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது. இது இரண்டையும் தவிர்த்துவிட்டால் வேறு எதை சாப்பிடுவது? ‘பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க’ ‘கொழுப்பை மட்டும் வாங்கிவந்து ஃப்ரை பண்ணி சாப்பிடுங்க’ என்கிறார்கள். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? 

பொதுவாக கொழுப்பைத் தவிர்க்கச் சொல்லிதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கொழுப்பை மட்டுமே சாப்பிடுங்கள் என்று சொல்வது ஏன்? ஏனென்றால் நம் உடம்பில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் குண்டாக இருக்கக் காரணம்.
இந்தக் கொழுப்பு சேரக் காரணம், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்கள். நாம் கார்போஹைட்ரேட்டை தவிர்க்கும்போது, நம் உடம்பு அதை தேட ஆரம்பிக்கிறது. அப்போது, உடம்பில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரித்துப் பயன்படுத்த தொடங்குகிறது. இதன்மூலம்தான் எடை குறைகிறது. ‘ஆனால் நாம் நேரடியாக கொழுப்பையே சாப்பிடுகிறோமே... அது என்ன ஆகும்?’ என்றால், அது கொழுப்பாக சேராது. அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியாக மாறி, எரிக்கப்பட்டுவிடும். சுருங்கச் சொன்னால், கொழுப்பைக் கரைக்க, கொழுப்பை சாப்பிட வேண்டும். முள்ளை முள்ளால் எடுக்கும் அதே டெக்னிக். 

உண்மையில் பேலியோ டயட் என்பது நவீன கால கண்டுபிடிப்பு அல்ல. இது ஆதி மனிதனின் உணவுமுறை. விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். அப்போது சாப்பிட்டதைப் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவு முறை. எடைக்குறைப்புக்கான பிரத்தியேக டயட் அல்ல; இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும். தேவையில்லாத கொழுப்பு கரைந்து, உடல் வலுவடையும்.
இந்தமுறையில் தன் உடம்பைக் குறைத்த பிரபல இணையப் பதிவரும், திரைப்பட இயக்குநருமான கேபிள் சங்கரிடம் பேசினோம். 

‘’நான் கடந்த ஒரு வருஷமா பேலியோவை ஃபாலோ பண்றேன். 2 மாதத்தில் 91 கிலோவில் இருந்து 80 கிலோவாக எடை குறைந்தேன். எனக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அதுவும் கண்ட்ரோலுக்கு வந்தது. பி.பி. அளவு நார்மல் ஆனது. இப்போது சுகர் மாத்திரையை முழுமையாக விட்டுவிட்டேன். எனக்கு சுகர் பிரச்னையே இப்போது இல்லை. காலையில் கார்ப் இல்லாத காய்கறி பொரியல், பகலில் பன்னீர், பன்னீர் டிக்கா, சீஸ், சிக்கன் சூப், மட்டன் சாப்ஸ், இரவில் முட்டை, ஆஃப் ஆயில், பன்னீர், மறுபடியும் காய்கறி பொறியல் இவைதான் என்னுடைய ஒரு நாள் டயட். 

வீட்டில் இருந்து செய்து சாப்பிடுவர்களுக்கு இது பிரச்னை இல்லை. என்னை மாதிரி வெளியில் சுற்றுபவர்களுக்கு இது ஒரு பிரச்னைதான். ஒரு ஹோட்டலுக்கு சென்று டேபிளில் அமர்ந்தால் சர்வர் வருவார். அவரிடம், ‘நாலு ஆம்லேட்’ என்றால் ஒரு மாதிரி பார்ப்பார். அதை முடித்து, ‘ரெண்டு அவிச்ச முட்டை’ என்றால் இன்னும் ஒரு மாதிரிப் பார்ப்பார். பொறியல்தான் இன்றைய இரவு உணவு என்று முடிவு செய்துவிட்டால் நேராக சரவண பவன் போவேன். அங்கே கால் கிலோ பொறியல் 30 ரூபாய்க்கு பார்சல் தருவார்கள். அதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுவேன். ஆரம்பத்தில் வித்தியாசமாகப் பார்த்தார்கள். இப்போது அவர்களே பழகிவிட்டார்கள். எனக்கும் ஒரு மாதிரி செட்டாகிவிட்டது.’’ என்கிறார்.