நம் மக்களின் மருத்துவச் செலவுகளைக் குறைப்பதற்காக வந்தவைதான் `ஜெனரிக்’ மருந்துகள். ஆனால், ‘`ஜெனரிக் மருந்தா... அப்படின்னா என்ன?’’ என்று கேட்கும் நிலையில்தான் நம் மக்களிடம் விழிப்பு உணர்வு இருக்கிறது.
ஒரு மருந்தை, அதில் உள்ள மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது ‘ஜெனரிக்’. ஒரு மருந்தோ, மாத்திரையோ கண்டுபிடிக்கப்பட்டு, மார்க்கெட்டுக்கு வந்து, அதன் காப்புரிமைக் காலம் முடிந்த பின்னர் அது எல்லோருக்கும் பொதுவானதாகிவிடும். பிறகு அதை எந்த மருந்து நிறுவனம் வேண்டுமானாலும் தயாரிக்கலாம்; விற்பனை செய்யலாம். இப்படி விற்கும் மருந்துகளையே ‘ஜெனரிக் மருந்துகள்’ என்று அழைக்கிறோம்.
ஒரு மருந்தை வேதியியல் பெயரில் இல்லாமல், தயாரித்து விற்பனை செய்யும் மருந்து நிறுவனங்கள் வைத்திருக்கும் பெயரால் அழைப்பது ‘பிராண்டட்.’ உதாரணத்துக்கு ஒன்று... நாம் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு மாத்திரை ‘பாரசிட்டமால்.’ இது ஜெனரிக் பெயர். தயாரிக்கும் நிறுவனங்கள் வைத்திருக்கும் பெயர்களால் `Calpal’, `Crocin’, `Dolo’, `Metacin’ என்று அழைக்கப்படுகிறது. ஒன்று, இரண்டல்ல, `பாரசிட்டமால்’ ஐந்நூறுக்கும் அதிகமான பிராண்டட் பெயர்களில் விற்கப்படுகிறது!
ஜெனரிக் மருந்துகளால் என்னென்ன நன்மைகள்?
ஒரு மருந்து நிறுவனம் புதிதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்தால், முதல் 20 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் மட்டுமே அதை விற்பனை செய்ய முடியும். இதைக் ‘காப்புரிமைக் காலம்’ என்று சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் வேறு எந்த நிறுவனமாவது அதைத் தயாரித்து, விற்பனை செய்ய விரும்பினால், கண்டுபிடித்த நிறுவனத்துக்கு ராயல்டி கொடுக்க வேண்டும். காப்புரிமைக் காலம் முடிந்த பின்னர், யாரும் மருந்தைத் தயாரித்து விற்பனை செய்ய முடியும்.
மருந்தைக் கண்டுபிடித்துத் தயாரிக்கும் நிறுவனம், மருந்தின் விலையை நிர்ணயம் செய்யும்போது அதில் உள்ள மூலப்பொருள்களின் விலையோடு, தாங்கள் கண்டுபிடித்ததற்கான சிறு தொகையையும் சேர்த்தே விலையாக வைப்பார்கள். இதனால் மருந்தின் விலை அதிகமாக இருக்கும். காப்புரிமைக் காலம் முடிந்த பின்னர், மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தைத் தயாரித்தால், மூலப்பொருள்களின் விலையோடு சிறு லாபத் தொகையை மட்டுமே சேர்த்து விற்பனை செய்வார்கள். எனவே, மருந்தின் விலை பல மடங்கு குறையும். மற்ற நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனமும் குறைந்த விலைக்கே மருந்தை விற்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும். இந்த விலைகளில்கூட சின்னச்சின்ன வித்தியாசங்கள் இருக்கும்.
``2016 அக்டோபர் மாதம், `சிகிச்சைக்கு வருபவர்களுக்கு எந்த ஒரு கம்பெனி பெயரிலும் (Brand name) மருந்துகளை எழுதிக் கொடுக்கக் கூடாது. அதன் ஜெனரிக் பெயர்களைத்தான் (Generic) எழுதித் தர வேண்டும்’ என்று இந்திய மருத்துவக் கழகம் (Medical Council of India) விதியை நிர்ணயம் செய்திருக்கிறது. சட்டத்திலும் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளைத்தான் எழுதுகிறார்களா என்பதை இந்திய மருத்துவக் கழகமும் கண்காணிப்பதில்லை’’ என்கிறார் மருத்துவர் புகழேந்தி.
‘‘ஒரு மருந்து வேறொரு நிறுவனத்தால் குறைவான விலைக்கு விற்கப்பட்டாலும், அதை எழுதித் தருவதில்லை. நம் மக்களும், `மருத்துவர்கள் எழுதித் தரும் நிறுவன மருந்துகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். `இதே மருந்து... வேற கம்பெனி புராடெக்ட் இருக்கு, விலையும் குறைவு... தரட்டுமா?’ என்று மருந்துக்கடைக் காரர்களே கேட்டாலும்கூட `வேணாம், விலை அதிகமா இருந்தாலும் பரவாயில்லை... டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தையே குடுங்க’ என்று கேட்டு வாங்குகிறவர்கள்தான் இங்கே அதிகம்” என்கிறார் அவர். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் உதவியோடு செயல்படும் `மக்கள் மருந்தக’த்தில் ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும், மக்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளையும் மெடிக்கல் ஷாப்களையும் தேடிச் செல்கிறார்கள் என்பது பற்றி விளக்குகிறார் மருத்துவர் புகழேந்தி.
‘‘அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் தரம் குறைந்த மருந்துகள்தான் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் நோய் குணமாகாமல், வெகு நாள்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அதனால் சலிப்பு ஏற்பட்டு, பலரும் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். ஆனால், அரசு மருத்துவர்களோ, `யாரும் தொடர்ச்சியாக வருவதில்லை’ என்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மக்கள் மருந்தகங்களிலும் சில முக்கியமான மருந்துகள் இல்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. மருந்து நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்திலிருந்து ஏழை மக்களைக் காப்பாற்ற, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக மருந்துகளைக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். அதே நேரத்தில், `இலவசமாகக் கொடுக்கிறோம்’ என்பதற்காகத் தரக்குறைவாகவும் அவற்றைத் தயாரிக்கக் கூடாது. ‘ஜெனரிக் மருந்துகள் அனைத்துமே தரமற்றவை என்கிற மருத்துவர்களின் பொதுவான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அனைத்து ஜெனரிக் மருந்துகளையும் அப்படிச் சொல்ல முடியாது. தரமில்லாத மருந்துகள் தயாரிக்கப்பட்டால், அவற்றைக் கண்டுபிடித்து அந்த நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதை விட்டுவிட்டு மக்களை இன்னும் ஏழையாக்குவது, பலிகடா ஆக்குவது கூடாது” என்கிறார் புகழேந்தி.
இதுபற்றி கூட்டுறவு மருத்துவமனைகளின் முன்னோடியான மருத்துவர் ஜீவானந்தத்திடம் பேசினோம். ``ரஷ்யாவின் உதவியோடு, `ஹெச்.ஏ.எல்’ (Hindustan Antibiotics Limited) என்ற பெயரில் அரசாங்கமே மருந்துகளைத் தயாரித்தது. பெரும்பாலான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மலிவுவிலைக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால், முறையற்ற நிர்வாகத்தாலும், தொழிற்சங்கங்களின் தேவையற்ற போராட்டங்களாலும் அந்த நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களின் விற்பனை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக இங்கே உள்ள மருந்துகளைத் தடைசெய்வது போன்ற செயல்களில் அரசும் ஈடுபட்டுவருகிறது. உலக வர்த்தக அமைப்பில் இந்தியா கையெழுத்திட்டதே இதற்குக் காரணம்.
3,000 ரூபாய்க்கு வெளியில் விற்கப்படும் மருந்துகள் அரசு நடத்திவரும் `மக்கள் மருந்தக’த்தில் வெறும் 400 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. ஆனால், முக்கியமான சில மருந்துகள் ஜெனரிக் மருந்துகள் அட்டவணையில் இல்லை. அங்கே கிடைக்காத மருந்துகளை வாங்க தனியார் மருந்துக் கடைக்குச் சென்றால், `மற்ற மருந்துகளையும் அங்கேயே போய் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று துரத்தாத குறையாகச் சொல்வார்கள். இதனால் `அனைத்து மருந்துகளையுமே தனியார் மருந்துக் கடைகளிலேயே வாங்கிவிடலாம்’ என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள். மிகவும் பின்தங்கிய நாடான வங்கதேசத்தில் கடந்த 20 வருடங்களாக அடிப்படை மருந்துகள் எல்லாம் ஜெனரிக் மருந்துகளாகக் கிடைக்கின்றன. நம் நாட்டிலும் அனைத்து அடிப்படை மருந்துகளும் (Basic) ஜெனரிக் மருந்துகளாகக் கிடைக்கும்படி செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் ஜீவானந்தம்.
`மருத்துவர்கள், ஜெனரிக் பெயர்களை மட்டும்தான் எழுதவேண்டும், பிராண்டட் பெயர்களை எழுதக் கூடாது’ என்ற அறிவிப்பு வந்தபோது தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்தது. இந்த அறிவிப்பால் மருந்துக்கடைகள் தங்கள் இஷ்டத்துக்கு, தங்களுக்குச் சலுகை தரும் கம்பெனி மருந்துகளையே விற்பனை செய்வார்கள் என்று குற்றச்சாட்டும் வைத்தார்கள். இது தொடர்பாகத் தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சேதுராமனிடம் பேசினோம். ``மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது, அது நோயாளியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவத்தன்மைகள் சார்ந்த பரிந்துரையாக இருக்கும். ஆனால், மருந்துக்கடைகள் தங்களுக்கு லாபம் கிடைக்கும் நிறுவனங்களின் மருந்துகளையே விற்பனை செய்வார்கள். மருந்து உற்பத்தி செய்கிற நிறுவனத்துக்கும் மருந்துக்கடைக்காரருக்கும் ஏதாவது பிரச்னை இருந்தால், அந்த நிறுவனத்தின் மருந்துகளை மருத்துவர்களே பரிந்துரைத்தால்கூட விற்பனை செய்ய மாட்டார்கள். இதுபோன்ற பல சிக்கல்கள் உள்ளன” என்கிறார் சேதுராமன்.
தமிழ்நாடு வேதியியலாளர்கள் மற்றும் மருந்தகங்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தன், ``சில மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பிராண்டட் பெயருடன், கீழே அதன் ஜெனரிக் பெயர்களையும் எழுதிக் கொடுப்பார்கள். ஆனால், `அப்படி வாங்கும் மருந்துகளால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், தாங்கள் பொறுப்பல்ல’ என்றும் மருந்துச்சீட்டில் எழுதியிருப்பார்கள். எனவே, நாங்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே விற்கிறோம்’’ என்கிறார்.
மத்திய அரசின் உதவியோடு ‘ஜன் அவுஷதி’ என்கிற பெயரில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 3,000 மருந்துக்கடைகளில் ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. கடை நடத்த விருப்பமுள்ளவர்களுக்கு அரசின் சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 227 ஜெனரிக் மருந்துக் கடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் முதன்முதலாக, சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில்தான் ஜெனரிக் மருந்துக்கடை ‘மக்கள் மருந்தகம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
சிவகங்கையில் உள்ள `மக்கள் மருந்தகம்’ கடையின் உரிமையாளர் கண்ணனிடம் பேசினோம். ``இந்தத் திட்டத்தின் கீழ் காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண பிரச்னைகளுக்கான மருந்துகள் முதல் அனைத்து வகையான வலி நிவாரணிகள், புற்றுநோய், ஹெச்.ஐ.வி போன்ற கொடிய நோய்களுக்கான மருந்துகள் வரை அனைத்துவிதமான மருந்துகளும் இங்கே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
வருகின்ற ஜனவரி மாதம் முதல் மேலும் பல மருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் வர இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இந்த மருந்தகங்கள் பற்றிச் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். அதனால் `ஜெனரிக் மருந்துகள்’ என்றாலே `தரமற்ற மருந்துகள்’ என்கிற சிந்தனை பலருக்கும் வந்துவிட்டது. அதனாலேயே பலரும் ஜெனரிக் மருந்துகளைப் புறக்கணிக்கிறார்கள்.
பலர் வணிக நோக்கத்தோடு ஆரம்பித்து, கடைகளைச் சரியாக நடத்துவதில்லை. தேவையான மருந்துகளை வாங்கி ஸ்டாக் வைப்பதில்லை. இதனாலும், இந்த மருந்துக்கடைகளின் மீது மக்களுக்கு ஒருவித அதிருப்தி இருக்கிறது” என்கிறார் கண்ணன்.
மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மருந்துகளின் விலையையும், கொடிய நோய்களுக்கான மருந்துகளின் விலையையும் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம்தான் முடிவுசெய்ய வேண்டும். மக்களுக்குப் பயன்படும் 348 மருந்துகளை `அத்தியாவசிய மருந்துகள்’ என்று இந்தப் பட்டியலில் கொண்டு வந்தது அரசு. ஆனால், இவற்றில் சில முக்கியமான மருந்துகள் இல்லை. உதாரணமாகக் காய்ச்சலுக்குப் பயன்படும் ஒரு மாத்திரையின் 500 மி.கி. வீரியம் உள்ள மாத்திரை பட்டியலில் இருக்கிறது, ஆனால், 650 மி.கி வீரியம் உள்ள மாத்திரை பட்டியலில் இல்லை. மக்களுக்கு ஒரே வாய்ப்பாக இருப்பது, அவர்கள் தெய்வமாகக் கருதும் மருத்துவர்கள்தான்.
மக்கள் மருந்தகங்களில் மாத விற்பனை
* மாநகரங்களில்: ரூ.5,00,000 - 10,00,000 வரை
* நகரங்களில்: ரூ.1,00,000 - 1,50,000 வரை
* கிராமங்களை ஒட்டிய பகுதிகள்: ரூ.50,000 - 1,00,000 வரை
ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்யும் மக்கள் மருந்தகங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய மண்டல அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்...
சென்னை: சக்கிஸ்வர்சிங் - 90953 06167
மதுரை: ராஜசேகர் - 94864 01773,
கோவை: அருண்குமார் - 94895 38779. விண்ணப்பங்கள் janaushadhi.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.