அறிமுகம் :
எலும்பின் தொடர்ச்சியில் முறிவு ஏற்படும் மருத்துவ நிலையே எலும்பு முறிவு எனப்படும். வலிமையான தாக்கம் அல்லது அழுத்தத்தால் எலும்பு முறிவு ஏற்படலாம். எலும்புப் புரை, எலும்புப் புற்று, எலும்புக் குறையுருவாக்கம் போன்ற நிலைகளினால் எலும்பு பலவீனமாகி சிறு காயத்தாலும் முறிவு ஏற்படலாம். இவ்வாறு முறிவு ஏற்பட்டால் அது நோயால் உண்டாகும் எலும்பு முறிவு எனப்படும்.
வகைப்பாடு:
காரணங்களால்:
- காயத்தால் முறிவு – உ-ம்: விழுதல், சாலை விபத்து, சண்டை போன்ற பல காரணங்களால் ஏற்படும் எலும்பு முறிவு.
- நோயியல் முறிவு – சில நோய்களால் எலும்பு பலவீனம் அடைவதால் ஏற்படும் முறிவு. உ-ம். நோயிடம் மாறலால் எலும்பு பலவீனம் அடைந்து எலும்பு முறிதல். நோயியல் முறிவுக்கு எலும்புப்புரை ஒரு பரவலான எடுத்துக்காட்டு.
அனைத்து முறிவுகளையும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
- மூடிய (எளிய) முறிவு: தோல் சிதையாமல் இருக்கும்.
- திறந்த (கூட்டு) முறிவு: எலும்பு முறிவோடு தொடர்புடைய காயம். இதனால் எலும்பு அசுத்தமாகி தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.
பிற வகையான முறிவுகள்:
- முழு முறிவு: எலும்பு முழுமையாகத் துண்டாதல்.
- பகுதி முறிவு: எலும்புகள் அரைகுறையாக இணைந்தே இருக்கும். எலும்புத் திசுவில் பிளவு இருக்கும். ஆனால் அது முழுமையாக எலும்பை ஊடுறுவிச் செல்லாது.
- நீள்வெட்டு முறிவு: எலும்பின் நீள் அச்சுக்கு இணையான முறிவு.
- குறுக்குவெட்டு முறிவு: எலும்பின் நீள் அச்சுக்கு செங்கோண முறிவு.
- சாய்கோண முறிவு: எலும்பின் நீள் அச்சுக்குக் குறுக்கான முறிவு.
- நெளி முறிவு: உடைந்த எலும்பின் ஒரு பகுதியாவது நெளிந்திருத்தல்.
- நொறுங்கிய முறிவு: எலும்பு பல துண்டுகளாக நொறுங்குதல்.
- தாக்கமுறு முறிவு: எலும்புத் துண்டுகள் ஒன்றுக்குள் ஒன்று புகுதல்.
- பீறல் முறிவு: எலும்புத் துண்டு முதன்மைப் பகுதியில் இருந்து விலகல்.
முறிவால் ஏற்படுவன:
- வலியும் இரத்தப்போக்கும்
- வீக்கம்
- பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி சிராய்ப்பும் தோல் நிறமாற்றமும்.
- காயப்பட்ட இடத்தில் நோயாளியால் உடலெடையை செலுத்த முடியாமை.
- பாதிக்கப்பட்ட இடத்தை நோயாளியால் அசைக்க முடியாமை.
திறந்த முறிவாக இருந்தால் இருக்கக்கூடியவை:
இரத்தக்கசிவு
நரம்புகள் அல்லது குழாய்கள், தண்டுவடம் மற்றும் நரம்பு வேர்கள் (தண்டுவட முறிவு) அல்லது மூளைப் பகுதிகள் (மண்டையோட்டு முறிவு) ஆகிய சார்ந்த பகுதிகளில் அதற்கேற்ற அறிகுறிகள் தோன்றும்.
காரணங்கள் :
வேகமாக மோதி விழுவதாலோ சாலை விபத்துகளாலோ பொதுவாக முறிவுகள் உண்டாகின்றன.
ஆரோக்கியமான எலும்புகள் மிகவும் வலிமையானவையும் நெகிழ்திறன் வாய்ந்தவையுமாகும். அவற்றால் சக்தி வாய்ந்த தாக்கத்தையும் எதிர்கொள்ள முடியும். மக்கள் வயதடையும் போது இரு காரணிகள் அவர்களின் எலும்பு முறிவு ஆபத்தைக் கூட்டுகிறது: பலவீனமான எலும்புகள் மற்றும் கீழே விழும் ஆபத்து. பெரியவர்களை விட குழந்தைகள் உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் விபத்து அல்லது விழும் ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து அதிகம். பலவீனப்படுத்தும் நோய் உள்ளவர்களின் எலும்புகள் பலவீனப்பட்டு அதனால் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. உதாரணமாக எலும்புப்புரை, தொற்று அல்லது புற்று இதில் அடங்குவன.
நோய்கண்டறிதல் :
நோய் வரலாற்றையும் உடல் பரிசோதனையையும் கொண்டு மருத்துவ ரீதியாக எலும்பு முறிவு கண்டறியப்படுகிறது.
முறிந்ததாகச் சந்தேகப்படும் எலும்பின் எக்ஸ்-கதிர் பிம்பமும் எடுக்கப்படும்.
எக்ஸ்-கதிர் மட்டும் போதாத போது சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. எடுக்கப்படும்.
சிக்கல்கள் :
பிழை இணைவு: முறிவு தவறான நிலையில் குணமடைந்தாலோ அல்லது முறிவு இடம் மாறினாலோ பிழை இணைவு ஏற்படும்.
எலும்பு வளர்ச்சியில் இடையூறு - குழந்தைப் பருவ எலும்பு முறிவு எலும்பின் இரு முனையையும் பாதித்தால் எலும்பின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பின்னாளில் குறை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகளும் அதிகரிக்கும்.
தொடர் எலும்பு அல்லது எலும்பு மச்சைத் தொற்று – தோலில் சிதைவு ஏற்பட்டால், நுண்கிருமிகள் உட்புகுந்து எலும்பிலும் மச்சையிலும் தொற்றை உண்டாக்கும். இதனால் தொடர் தொற்று உண்டாகும் (எலும்பழற்சி). நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து நுண்ணுயிர்க்கொல்லிகள் அளிக்க வேண்டி இருக்கும். சில வேளைகளில் அறுவை அல்லது சுரண்டல் தேவைப்படும்.
எலும்புச் சாவு – எலும்பு தேவைப்படும் இரத்தத்தைப் பெறாவிட்டால் சாகும்.
நவீன சிகிச்சை முறை :
மூடிய முறிவை மயக்க மருந்து இல்லாமலும் கொடுத்தும் சீர்செய்யலாம். எலும்பு முறிவு மருத்துவத்தை அறுவை அல்லது மரபு ரீதியானது என இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.
அறுவை சிகிச்சை அற்ற எந்த முறையும் மரபு ரீதியானது எனப்படும். வலியைக் கட்டுப்படுத்துதல், நகராமல் இருப்பது அல்லது அறுவையின்றி சீர்ப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
மரபு ரீதியான அணுகுமுறை: குணமான பின்னர் காயமடைந்த பகுதி முடிந்த அளவு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை உறுதிப் படுத்துவதே முறிவு மருத்துவத்தின் நோக்கமாகும். காயம் பட்ட எலும்பு முற்றிலும் குணமாக சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே மருத்துவத்தின் இலக்காகும்.
அசையாக் கட்டு: முறிந்த எலும்பு குணமடையும் போது பொருந்த வேண்டும். இவற்றில் அடங்குவன:
- மாவுக்கட்டு அல்லது பிளாஸ்டிக் செயல் அணைச்சட்டம்: எலும்பு குணம் ஆகும் வரை அதை நிலையாக இவை வைத்திருக்கும். தற்காலத்தில் துளையுடை கட்டுக்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை எளிதல் இடக்கூடியவை. சிரமமாகவும் இருக்காது.
- உலோகத் தகடுகளும் திருகாணிகளும்: தற்கால முறைகள் குறைந்த அளவுக்கே அறுவை தேவைப்படும் பொறிநுட்பங்கள் ஆகும்.
- உள் மச்சை ஆணிகள் – நீண்ட எலும்புகளின் உள்ளே நடுவில் எஃகு கம்பிகள் பொருத்தப்படும். குழந்தைகளுக்கு நெகிழ் கம்பிகள் பயன்படுத்தப் படலாம்.
- வெளிப்புற பிடிமானங்கள் – இவை உலோகம் அல்லது கார்பன் நாரால் செய்யப்பட்டவை. இவற்றில் இருக்கும் எஃகு பின்கள் தோலை ஊடுறுவி நேரடியாக எலும்புக்குள் செல்லும். இவை உடலுக்கு வெளியே ஒருவகை சாரம் போல் அமையும். பொதுவாக முறிந்த எலும்பு 2-8 வாரங்கள் அசைவற்று வைக்கப்படும். முறிந்த எலும்புவகை, இரத்த ஓட்டப் பிரச்சினை அல்லது தொற்று போன்றவற்றைப் பொருத்து கால எல்லை அமையும்.
வலி கட்டுப்படுத்தல்: இபுபுரூபன், டைக்ளோஃபென் போன்ற வலி நிவாராணிகள் பயன்படுத்தப் படுகின்றன.
உடல்பயிற்சி சிகிச்சை: முறிவு குணமடைந்த உடன் தசை வலிமையையும் பாதிக்கப்பட்ட பகுதியில் அசைவையும் மீண்டும் பெறுதல் முக்கியமானதாகும். முறிவு மூட்டின் அருகிலோ அல்லது மூட்டிலோ ஏற்பட்டிருந்தால் நிரந்தர விறைப்பு உண்டாகும் அபாயம் உண்டு. முன்போல மூட்டை வளைக்க இயலாது.
அறுவை சிகிச்சை அணுகுமுறை: பாதிக்கப்பட்ட எலும்பு அல்லது மூட்டின் அருகில் தோலுக்கோ அல்லது மென் திசுக்களுக்கோ சிதைவு ஏற்பட்டிருந்தால் பிளாஸ்டிக் அறுவை தேவைப்படும்.
· எலும்பு ஒட்டு: மிகவும் சிக்கலான, நோயாளிக்கு பெரும் உடல்நல ஆபத்தை விளைவிக்கக் கூடிய அல்லது தகுந்தவாறு நலமடையாத எலும்பைச் சீர்செய்ய இழந்த எலும்புக்குப் பதில் எலும்பு பொருத்தும் எலும்பு ஒட்டு அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது.
தடுப்புமுறை :
ஊட்டச்சத்தும் சூரியஒளியும் – எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மனித உடலுக்கு போதுமான சுண்ணாம்புச் சத்து தேவை. பால், பாலாடைக்கட்டி, தயிர், கீரை ஆகியவை சுண்ணாம்புச் சத்து நிறைந்தவை. சுண்ணாம்புச் சத்தை உறிஞ்ச நமது உடலுக்கு உயிர்ச்சத்து டி தேவை. சூரிய ஒளி உடல் மேல் படுதலும், முட்டை, எண்ணெய்ச் சத்து நிறைந்த மீன் வகைகளை உண்ணுதலும் உயிர்ச்சத்து டி-யைப் பெற சிறந்த வழிகள்.
உடல் செயல்பாடுகள் – எலும்புகளுக்குப் பாரந்தரும் உடல்பயிற்சிகளைச் செய்யும்போது எலும்புகள் அடர்வும் வலிமையும் பெறுகின்றன. எலும்புகளை உடல் இழுக்கும் உடல்பயிற்சிகளான கயிறுதுள்ளல், நடை, ஓட்டம், நடனம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். வயதாகும் போது எலும்புகள் பலவீனம் அடைவதோடு, உடல் செயல்பாடுகளும் குறைகின்றன. இதனால் எலும்புகள் மேலும் பலவீனம் அடையும் ஆபத்து உண்டாகிறது. அனைத்து வயதினரும் உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம் ஆகும்.
பின் மாதவிடாய் - பெண் இயக்கு நீர்மம் பெண்களின் உடலில் சுண்ணாம்புச் சத்தை பின் மாதவிடாய் காலம் வரை முறைப்படுத்துகிறது. இதற்குப் பின் சுண்ணாம்புச் சத்தை முறைப்படுத்துவது கடினமாகிறது. இதனால் பெண்கள் தங்கள் எலும்பு அடர்த்தி மற்றும் வலிமை குறித்து பின்மாதவிடாய்க் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment