Welcome

Monday, 24 October 2016

Energy Tonic

நம் வாழ்வில் நாம் உயர்வடைய, உன்னதமான இடத்தைப் பிடிக்க, இலக்கு அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒன்றையும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளும் அடுத்த கட்ட முயற்சியும்தான் நம்மை மேம்படுத்தும்.இரண்டு நண்பர்கள் ஏரிக்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
அந்த ஏரியில் மீன்கள் துள்ளும் அழகை ரசித்தபடி கடந்தார்கள். ‘‘ஏரியில் மீன்களைப் பார்த்தாயா?’’ என்று ஒருவன் கேட்டான்.‘‘ஆமாம்’’ என்றான் இன்னொருவன். உரையாடல் தொடர்ந்தது.‘‘அவை மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றன.’’
‘‘நீயென்ன அந்த மீனா?’’‘‘இல்லை.’’
‘‘அப்படியென்றால் அவை சந்தோஷமாக இருக்கின்றன என உனக்கு எப்படித் தெரியும்?’’ என்று மடக்கினான் ஒருவன்.‘‘நீ நீதானே. நான் இல்லையே’’ என்று பதிலுக்குக் கேட்டான் இன்னொருவன்.
‘‘ம்...’’‘‘அப்படியெனில் மீன்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன என நான் உணர்ந்ததை உன்னால் எப்படி உணர முடியும்?’’ உண்மைதானே! நம்மை நம்மால் மட்டுமே உணரமுடியும். நம்மை நாமே உணர்ந்தால்தான் நம் இலக்குகளை நிர்ணயிக்க முடியும்.
இலக்குகளை நிர்ணயித்தால்தான் அதை நோக்கிப் பயணம் செய்யப் பாதையைக் கண்டடைய முடியும். பாதையைக் கண்டடைந்தால் மட்டும் போதாது. அந்தப் பாதையில் பயணம் செய்வதற்கேற்ப நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ளவும் வேண்டும். அதாவது, அப்டேட் செய்துகொள்ளுதல் மிக அவசியம்.
மீண்டும் மீனையே எடுத்துக்கொள்வோம். நாம் சிறிய தொட்டி ஒன்றில் வாழும் மீன். நம் இலக்கு, பெருங்கடலை அடைவது. சிறிய தொட்டியிலிருந்து விட்டு விடுதலையாகும் வழியைக் கண்டறிந்து, பிரமாண்டமான கடல் எனும் வெற்றியை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.
முடியுமா? முடியும். அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டால் நிச்சயம் முடியும். இங்கே மாற்றிக்கொள்ளுதல் என்பது நம் இலக்கு களின் தேவைக்கேற்ப அறிவை வளர்த்துக் கொள்வது. உலகின் வேகத்துக்கேற்ப, காலத்தின் அவசியத்திற்கேற்ப நம் திறனை மேம்படுத்திக்கொள்வது. சலிப்பில்லாமல் விடாமுயற்சியைத் தொடர்வது.

தொட்டி மீனாகிய நாம், துள்ளிக் குதித்து ஒரு சிறிய குட்டைக்குள் விழுகிறோம். அங்கிருந்து குதித்து ஓரளவு பெரிய குளத்தில் விழுகிறோம். அடுத்த கட்டம் நீரோட்டம். ஒரு சிறிய ஓடைக்குள் நீந்தத் தொடங்குகிறோம். சிறிய ஓடை பெரிய வாய்க்காலாக விரிகிறது. அதன் ஓட்டத்திலும் தாக்குப் பிடித்து, சலசலவென ஓடும் நதியை அடைகிறோம். நதியிலும் நாசூக்காகப் பயணித்து நம் லட்சியமான கடலை அடைகிறோம்.

அதுதான் வெற்றி.‘தொட்டியே உலகம்’ என்று முடங்கும் மீன், என்றைக்குமே கடலை அறியப் போவதில்லை. அடையப் போவதில்லை. ஆனால், கடலை இலக்காக நிர்ணயித்த மீன், எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
சிறிய, ஓட்டமே இல்லாத நீர்ப்பரப்பில் வாழ்ந்து பழகிய அந்த மீன், பெரிய நீர்ப்பரப்புக்கேற்ப, நீரோட்டத்திற்கேற்ப தனது நீந்தும் திறனை வளர்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். சலிப்பின்றி நீந்திக்கொண்டேயிருக்க வேண்டும்.அப்போதுதான் தொட்டுவிடும் தூரத்தில் கடல் கிட்டும்.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்குகளைத் தயாரிப்பதற்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. மின்விளக்குகளின் மையத்தில் மெல்லிய மூங்கில் இழைகளை வைத்து சோதனை செய்தார். அவை நன்றாக எரிந்தன.
அந்த வகை மூங்கில்கள் தெற்காசிய நாடுகளில் கிடைப்பதாகக் கேள்விப்பட்டார். அவற்றைச் சேகரித்து வருவதற்காக ஜேம்ஸ் ரிகால்டன் என்ற புவியியல் ஆசிரியரை அனுப்ப முடிவு செய்தார். அவரது பயணம் ஆபத்து நிறைந்ததென்பதால் அவருக்கு 1500 டாலர் இன்சூரன்ஸ் தொகையாகக் கொடுப்பதற்கு எடிசன் சம்மதித்தார்.
மாதிரி மூங்கிலுடன் ஜேம்ஸ் தன் பயணத்தைத் தொடங்கினார். முதலில் இங்கிலாந்து, அங்கிருந்து சூயஸ் கால்வாய் வழியாக சிலோன் சென்றார். அங்கே அவருக்குச்  சிலவகை அரிய ராட்சச மூங்கில்கள் கிடைத்தன.
பின் தென் இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு கல்கத்தா வந்தார். அங்கும் பலவகை மூங்கில்கள் கிடைத்தன. அங்கிருந்து ரங்கூன் சென்றார். அப்புறம் சீனா வழியாக ஜப்பான் சென்றார். அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பலவகை மூங்கில்களில், தேவையானவற்றை வாங்கி ஒரு கப்பலில் அனுப்பி வைத்தார்.
மீண்டும் 14 நாட்கள் பசிபிக் கடலில் பயணம் செய்து சரியாக ஒரு வருடம் கழித்து, புறப்பட்ட அதே இடத்துக்கு அதே மணியில் அதே நிமிடத்தில் வந்து சேர்ந்தார் ஜேம்ஸ்.மறுநாள் ஜேம்ஸ், தான் சேகரித்த பல அரிய வகை மூங்கில்களோடு எடிசனைப் பார்க்கச் சென்றார். வரவேற்பு பலமாக இருக்கும் என்று நினைத்த ஜேம்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘‘வாருங்கள், மூங்கில் கிடைத்ததா?’’ என்று ஒரு கேள்வியைச் சம்பிரதாயத்துக்குக் கேட்டார் எடிசன்.
‘‘பல அரிய வகை மூங்கில்களைக் கொண்டு வந்துள்ளேன். எது தேவைப்படும் என நீங்கள்தான் ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்’’ என்றார் ஜேம்ஸ்.சற்றே அவரைத் தலை தூக்கிப் பார்த்த எடிசன், ‘‘நீங்கள் இல்லாதபோது செயற்கை கார்பன் இழை ஒன்றைக் கண்டு பிடித்துவிட்டேன். மூங்கில்களைவிட அது மிகச் சிறப்பாகப் பயன்படுகிறது.
அதிகம் தாக்குப் பிடிக்கிறது. செலவும் குறைவு. அலுவலகத்தில் சொல்லியுள்ளேன். போய் உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ எனப் பதிலளித்துவிட்டு தன் வேலைகளில் மூழ்கினார் எடிசன்.மூங்கில் சேகரிப்பதற்கென்று மட்டுமே எடிசன் பல ஆயிரம் டாலர்களுக்கு மேல் செலவு செய்திருந்தார். ‘ஜேம்ஸ் மூங்கில் கொண்டு வரட்டுமே’ என எடிசன் ஒரு வருடம் வீணாகக் காத்திருக்கவில்லை. ‘இல்லை, நமக்காக அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு மூங்கில் கொண்டு வந்திருக்கிறாரே அதைப் பயன்படுத்த வேண்டுமே’ என்றும் எண்ணவில்லை.
ஏழைகளுக்கும் பயன்படும் வகையில் மிகக் குறைந்த செலவில் மின் விளக்கைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது மட்டுமே எடிசனின் நோக்கமாக இருந்தது. அதை நோக்கி மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தார். மூங்கில் இழைகளைவிட அதிக திறனுள்ள, மலிவான செயற்கை கார்பன் இழைகளைத் தயாரிக்க முடிந்ததால் அதைப் பயன்படுத்திக்கொண்டார். செலவு செய்துவிட்டோமே என மூங்கிலைக் கட்டிக்கொண்டு அழவில்லை.
‘உலகுக்கு எது தேவையோ அதைக் கண்டுபிடி!’ என்பதே எடிசனின் தேடல் மொழி.உலகின் தேவைக்கேற்ப தன் அறிவை, தேடலை, கண்டுபிடிப்புகளை அப்டேட் செய்து கொண்டே இருந்தார் எடிசன். உலகின் நம்பர் 1 கண்டுபிடிப்பாளராக எடிசன் இன்றும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இதுவே. ஆகவேதான் எடிசனின் கண்டுபிடிப்புகள் பலவும் நவீன கண்டுபிடிப்புகள் பலவற்றின் தாயாக விளங்குகின்றன.
நம்மால், ஆல்வா எடிசனாக முடியாது. ஆனால், அவரைப் போல உலகின் தேவையறிந்து நம் திறனை மேம்படுத்திக்கொண்டு ‘அப்டேட் எடிஷனாக’ முடியும். தொட்டி மீன், கடல் மீனாக மாறுவதற்கு அதுவே அவசியத் தேவை.‘தொட்டியே உலகம்’ என்று முடங்கும் மீன், என்றைக்குமே கடலை அறியப் போவதில்லை. அடையப் போவதில்லை. ஆனால், கடலை  இலக்காக நிர்ணயித்த மீன், எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment