Welcome

Sunday, 4 September 2016

Know your medicine...know your pharmacist

கொஞ்சம் பெரிய கட்டுரை தான் பொறுமையாய் படிக்கவும்..!
ஒரு அலோபதி மருத்துவர் ஒரு மருந்துச் சீட்டு எழுதும் முன் நான்கரை வருடங்கள், உடலுறுப்புகளின் அமைப்பியல் (உடலுக்குள் உறுப்புகள் எங்கெங்கே, எவ்வாறு அமைந்துள்ளன), உடற்கூறு இயல், உடல் உறுப்புகள், சுரப்பிகளின் செயல்பாடுகள், ரத்த ஓட்டம், உயிர் வேதியியல் மாற்றங்கள், நுண்ணுயிரியல், நோய்களின் முக்கிய காரணிகள், அலோபதி மருந்தியல், நோய் குறியியல், நோய் உடலில் ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத தெரிந்த மாற்றங்கள் போன்ற அடிப்படை புரிதல் விஞ்ஞானங்களை கற்ற பிறகு, பொது மருத்துவம், பெண்கள் நோய் மருத்துவம் மற்றும் குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சை முறைகள், கண், காது, மூக்கு, தொண்டை, இதயம், கை, கால் எலும்பு முறிவு போன்ற நோய்களை கற்று அறிந்த பின்பு மருந்துச் சீட்டு எழுத அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற பின்பே எழுத அனுமதிக்கப்படுகிறார்.
‘FDA Approval பெற்றிருக்கிறதா, நம் நாட்டில் பயன்படுத்த உரிமம் இருக்கிறதா, நம் நாட்டு வல்லுனர்கள் இதை தம் நோயாளிகளுக்கு பயன்படுத்துகிறார்களா, இம்மருந்தின் மருத்துவ ரசாயனம் அறிந்தவர் அதை மருந்தாகப் பயன்படுத்த மேற்கொண்ட சோதனைகள் ( Pre Clinical Trials With animals, Human beings Volunteers advised) பற்றிய விவரங்கள், அதை முன் நின்று நடத்திய மருத்துவக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்திய மருத்துவ வல்லுனர்களின் மேற்பார்வையில் நோயாளிகளுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் (Post Clinical / Launch Trail) மற்றும் இது பற்றிய கருத்தரங்குகளில் கலந்து கொண்ட பின்னரே, நவீன மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் புதிய மருந்துகளை எழுதுவார்கள்.
நவீன அலோபதி மருத்துவம் மனித உடலை அதன் உறுப்புகளை வேதியியல் கூறுகளாகத்தான் (body is a Biochemical Factory) பிரித்து உணர்ந்து கற்றுத் தெளிகிறது. எலும்புகள் கால்சியம், மெக்னீசியம், சிலேனியம் மற்றும் தாதுப்பொருட்களுடன் ஆன திடமான எலும்புத் திசுக்களால் ஆனது. இது போன்று ஒவ்வொரு திசுக்களும் சில வேதியியல் பொருட்களால் அடிப்படை ஆதாரங்களோடு ஆனதோடு, அவற்றின் செயல்பாட்டுக்கும் சில வேதியியல் மாற்றங்களே காரணமாகின்றன. திசுக்கள், செல்களினால் ஆனவை என்பதை அறிவோம். செல்களின் சுவர்கள் கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச் சத்துகளால் ஆனவை. சைட்டோபிளாசம் எனப்படும் செல்களின் உள்ளிருக்கும் திரவமானது எலெக்ட்ரோலைட்ஸ் எனப்படும் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு பைகார்பனேட் ஆகிய) தாதுப் பொருட்களாலும் புரதம் மற்றும் சர்க்கரையாலும் ஆனவை.
அதன் செல்களின் கரு அல்லது உட்கரு DNA, RNA போன்ற புரோட்டீன்களால் ஆனவை. தசை செல்கள் புரதச் சத்தினால் ஆனது. தசைகள் விரிந்து சுருங்க கால்சியம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அதற்குத் தேவையான ஆற்றல் கார்போஹைட்ரேட் மூலமாகக் கிடைக்கிறது. செல்கள், திசுக்கள், உறுப்புகள் மற்றும் உடலே பயோகெமிக்கல் ஃபேக்டரிதானே!(மருந்தாளுநர் தகவல் வலை  பூ :www.tpywf.blogspot.in)    
அதில் ஏற்படும் குறைகளை சரி செய்ய வேறு என்ன தர முடியும்?
நவீன மருத்துவத்தின் அடிப்படையே இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், பரிணாமவியல் மற்றும் பாரம்பரியவியல் ஆகிய விஞ்ஞானங்களை உள்ளடக்கியது. நவீன மருந்துகள் என்றவுடன் அவை மட்டுமே கெமிக்கல் என பிரித்து பார்ப்பதே விஞ்ஞான முதிர்ச்சியற்ற ஒரு ஒப்பீடுதான். உடலும் உணவுமே உயிர் வேதியியல் பொருட்கள் எனும்போது, உட்கொள்ளும் மருந்து அதனுடன் தொடர்பு உடையதாகத்தானே இருக்க முடியும்?
தாமிரம், மாங்கனீஸ், அயோடின், செலினியம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சல்பர் போன்ற தாதுப்பொருட்கள் மிகக்குறைந்த அளவில் நம் உடலில் இன்றியமையாத செயல்களை செய்து வருகின்றன. சோடியம் இல்லையென்றால் பரிமாற்றங்களே உடலில் நடைபெற வாய்ப்பு இல்லை. பொட்டாசி யம், கால்சியம் குறைந்தால் இதய தசைகள் வேலை செய்வது நின்றுவிடும். எலும்புகள் திடத் தன் மையை இழந்துவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு(மருந்தாளுநர் தகவல் வலை  பூ :www.tpywf.blogspot.in)என்பது போல மாற்று மருந்துகளில் உள்ள உலோகங்கள் உடலின் சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட காரணமாகின்றன. ஆகவே, நவீன மருத்துவம் சாட்சிகளை ஆதாரமாக வைத்து (evidence based medicine) நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவ முறையாகும்.
நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் (நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கும் பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும்) என்ற குறளின்படி, நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கு வேறு எந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத, ‘எந்த கிருமி - அதற்கு எந்த மருந்து’ என்று ஆராய்ந்து ‘ஆன்டிபயாட்டிக்’ மூலம் குணப்படுத்தப்படுகிறது. உடல் உறுப்புகளின் குறைபாடுகளினால் (பிறவியிலோ, பின்னாளிலோ, வாழ்நாளிலோ) ஏற்படும் நோய்களுக்கு அதை சரி செய்யும் மருந்துகளும் அறுவைசிகிச்சை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. உடல் நோய் செயல்பாடு குறை களினால் நோய் வருமானால் அதற்கு ஏற்ப செயல்பாடுகளை சரி செய்யும் மருந்துகளும் அறுவை சிகிச்சைகளும் நோயை குணப்படுத்துகின்றன.
ஆங்கில மருந்துகளை கையாள்பவர்கள் எந்த நோயாளிகளுக்கு எதைக் கொடுக்கக்கூடாது, அதன் பக்கவிளைவுகள் என்ன? அதை யாருக்கெல்லாம் முன்னெச்சரிக்கையாக கொடுக்க வேண்டும்? யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? இதையெல்லாம் அறிதல் அவசியம். இவை தகுதிவாய்ந்த மருந்தாளுநரிடம் மட்டுமே கிடைக்க கூடிய தகவல்கள்..! மன்னிக்கவும் உயிர் காக்கும் தகவல்கள்.எனவே எப்போதும் மருந்துகள் வாங்கும் போது அவர் மருந்தாளுநர்தானா என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள்.
ஆங்கில மருந்துகளுக்கு மட்டும் பக்க விளைவுகள் இருப்பதாக ஒரு தவறான கருத்து எல்லாத் தரப்பு மக்களிடமும் - அதிலும் கற்றவர்களிடம் அதிகம் இருக்கிறது. விளைவை ஏற்படுத்தும் ஒரு வினைக்குத்தானே (மருந்துக்குத்தான்) பக்க விளைவும் இருக்க முடியும். நவீன மருத்துவம் என்பது அனுபவம் சார்ந்த (Experience Based) மருத்துவ முடிவுகளில் இருந்து சாட்சிகளையும் ஆதாரங்களையும் ஆதாரமாகக் கொண்ட (Evidence Based), மருந்துகளின் ஆளுமை (Efficacy), பாதுகாப்பு (Safety) மற்றும் அவற்றின் நோயை குணப்படுத்தும் தனித் திறமை (appropriateness) என்ற அடிப்படையில் மருந்துகளின் நடைமுறை சாத்திய ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது.
மருந்து (Drug) எனப்படுவது வெளியிலிருந்து செலுத்தப்படும் ஒரு வேதியியல் மூலக்கூறாகும். அது அடிப்படையில் மனித குலத்துக்குநன்மை செய்வதாக இருக்க வேண்டும். அதன் ஆளுமை, பாதுகாப்பு தரம், விலை, தாராளமாகக் கிடைக்கும் தன்மை மற்றும் பக்க விளைவுகளும் எதிர்விளைவுகளும் மிகக் குறைவாக உள்ளது ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும். இத்தனை பாதுகாப்புகளையும் தாண்டி வெளிவரும் நவீன மருத்துவ மருந்துகள் Good Manufacturing Practices (GMP) என்ற மிகச்சுத்தமான மருந்து தயாரிக்கும் விதிமுறைகளை மருந்து கம்பெனிகள் கடைப்பிடிக்கின்றனவா? அரசு இயந்திரம் கண்காணிக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி! அதையும் தாண்டி வெளிவரும் நவீன மருத்துவ மருந்துகளை வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல நவீன மருத்துவம் படித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கையாள கற்ற மருந்தாளுநர்களிடம் (பார்மசிஸ்ட்) மட்டுமே கிடைக்க செய்ய வேண்டும்.


தோழமை தொடர்பில் : திருப்பு முனை அ.சாணக்கியன்

No comments:

Post a Comment